Enable Javscript for better performance
வெற்றி நம்பிக்கையில் கட்சிகள்!- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, வாக்களித்த காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றிவாய்ப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்தனர்.

    தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.

    மக்களவைத் தேர்தல் களத்தில் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், கிருஷ்ணா தீரத், தில்லி பிரதேச பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன், காங்கிரஸ் பொதுச் செயலர் அஜய் மாக்கன், பத்திரிகையாளரும் அரசியல்வாதியுமான ஆசுதோஷ், சந்தீப் தீட்சித், மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி, பாஜக தலைவர் மீனாட்சி லேகி உள்ளிட்டோர் உள்ளனர்.

    வியாழக்கிழமை காலை வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் அந்தந்த தொகுதி அரசியல் கட்சி வேட்பாளர்களும் வாக்குச்சாவடியில் மக்களுடன் வரிசையில் நின்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்தனர்.

    காங்கிரஸ்: சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் கபில் சிபல் தனது வாக்கை முதலில் பதிவு செய்தார். அவர் காமராஜர் லேனில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

    அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "ஒவ்வொரு தேர்தலும் சவாலானது. எனினும், தேர்தலில் தனிப்பட்ட முறையில் ஒருவர் மீது குற்றம் சுமத்துவது கூடாது. பிரச்னைகள் அடிப்படையில்தான் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். மேலும், இந்த முறை தேர்தலில் பிரச்னைகள் அடிப்படையில் யாரும் பேசவில்லை.

    அதற்கு பதிலாக பொருள்களை விளம்பரம் செய்வதுபோல் தனிநபர்கள் டி.வி.யில் விளம்பரப்படுத்தப்படுகின்றனர். இது வருந்தத்தக்கது. இதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்' என்றார்.

    புது தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கன், தொகுதிக்குள்பட்ட ரஜௌரி கார்டனில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அவர் கூறுகையில், "நான் வெற்றி பெறுவேன் என்பதில் உறுதியாக உள்ளேன்' என்றார்.

    கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அத் தொகுதியின் இரு முறை உறுப்பினரும், தில்லி பிரதேச முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகனுமான சந்தீப் தீட்சித், தனது வாக்கை பதிவு செய்த பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், "தொகுதியில் எனது வெற்றிக்கான பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக நம்புகிறேன்.

    கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற தோல்வி போல் இம் முறை இருக்காது. சென்ற முறை ஏழு மக்களவைத் தொகுதியில் வென்றது போல இம் முறையும் அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். மக்களிடம் காங்கிரஸýக்கு மீண்டும் செல்வாக்கு அதிகரித்துள்ளது' என்றார்.

    பாஜக: இதே தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் வர்தன் கிருஷ்ணா நகரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதால் தில்லி அரசியலில் இருந்து ஒதுங்கிச் செல்வதாக அர்த்தம் இல்லை. நாடாளுமன்றப் பணியாற்றினாலும், தில்லி அரசியல் பணியில் இருந்து விலகிச் செல்ல மாட்டேன். அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்' என்றார்.

    புது தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் மீனாட்சி லேகி தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அதன்பிறகு அவர் கூறுகையில், "இப்போதுதான் எனது வாக்கைப் பதிவு செய்தேன்.

    கடந்த 10 ஆண்டுகளாக ஒரே வாக்குச் சாவடியில்தான் வாக்கை பதிவு செய்துவருகிறேன். தில்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும். நரேந்திர மோடி பிரதமராக வருவார். மோடி அலை யதார்த்தமாக உள்ளது. கிராமப்புற மக்களும், நகர்ப்புற மக்களும் பாஜக பக்கம் உள்ளனர்' என்றார்.

    ஆம்ஆத்மி: புதுதில்லி தொகுதியில் போட்டியிடும் ஆம்ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஆசிஷ் கேத்தன் கூறுகையில், "தில்லி மக்களுக்கு முதல் முறையாக கிடைத்துள்ள நேர்மையான விருப்பத் தேர்வாக தற்போதைய மக்களவைத் தேர்தல் அமைந்துள்ளது.

    இதற்கு முன்பு காங்கிரஸýக்கும் பாஜகவுக்கும் மாறி, மாறி வாக்களித்த நிலைமை இருந்தது. மேலும், மத்தியில் 10 ஆண்டுகளும் மாநிலத்தில் 15 ஆண்டுகளும் காங்கிரஸ் கட்சி தவறான ஆட்சியை அளித்தது. ஆகவே, தில்லியில் ஆம்ஆத்மியை நேர்மையான விருப்பத் தேர்வாக தில்லி வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது' என்றார் அவர்.

    வடமேற்கு தில்லி தொகு பாஜக வேட்பாளர் உதித் ராஜ், தனது வாக்கை லேடி இர்வின் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.

    இதேபோன்று, ஏழு தொகுதியில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai