வேலை, மகளிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை வேண்டும்
By புது தில்லி, | Published on : 11th April 2014 12:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாட்டில் வேலைவாய்ப்பு, மகளிர் பாதுகாப்பு, நல்ல பொருளாதாரக் கொள்கைகள், சமய நல்லிணக்கம் ஆகியவை நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களித்தவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
தில்லி பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. சுமார் 1.27 கோடி வாக்காளர்களில் 18 வயது நிரம்பிய 3.37 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்கும் தகுதியைப் பெற்றிருந்தனர். தலைநகரில் மொத்தம் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் சுமார் 11,750 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் முதல்முறையாக வாக்களித்தவர்கள் தங்களது அனுபவம், எதிர்பார்ப்பு குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு:
வாக்களிப்பு மகத்தானது: புது தில்லி மக்களவைத் தொகுதியில் உள்ள துக்ளக் கிரெசன்ட் சாலையில் உள்ள வாக்குசாவடியில் தந்தையுடன் வந்து வாக்களித்த கல்லூரி மாணவி நான்ஸி (18) கூறுகையில், "முதல் முறையாக வாக்களிப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் புதிய அனுபவத்தையும் அளித்துள்ளது. ஜனநாயகத்தை மலரச் செய்வதில் வாக்களிப்பு மகத்தானது என்பதை உணர்ந்துள்ளேன்' என்றார்.
வேலைவாய்ப்பு முக்கியம்: கல்லூரி மாணவி அஞ்சலி (20) கூறுகையில், "நாட்டில் மகளிர் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன. ஆனால், எங்களைப் பொருத்தமட்டில் வேலைவாய்ப்பு முக்கியமானதாகும்' என்றார் அவர்.
மாற்றத்துக்கான தருணம்: மற்றொரு முதல்முறை வாக்காளரான அகாங்க்ஷô பúஸாய் (22) கூறுகையில், "மாற்றத்திற்கான உண்மையான தருணம் இது. முதல்முறை வாக்காளர்கள் தங்கள் மூலம் மட்டுமே மாற்றம் வரும் என்ற வலுவான நம்பிக்கையுடன் தங்களது வாக்கைப் பதிவு செய்ய வேண்டும். வாக்களித்த பிறகு ஒரு பொறுப்புள்ள குடிமகன் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டுள்ளது' என்றார்.
கோல் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த முதல்முறை வாக்காளர் முகம்மது ஜாவீத் (23) கூறுகையில், "சுகாதாரம், குடிநீர் பிரச்னை, குற்றச் சம்பவங்கள் ஆகிய பிரச்னைகளுக்காக நாம் நிர்வாகத்தைக் குறை கூறுகிறோம். அப்படியானால், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நாம் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க வேண்டும்' என்றார்.
பெண்களுக்கு பாதுகாப்பு தேவை: 18 வயது வாக்காளர் ஷீனா தன்கர் கூறுகையில், "தில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எந்த நேரத்திலும் பெண்கள் பயமின்றி சுதந்திரமாகச் செல்லும் நிலை உருவாக வேண்டும். அதேபோன்று ஊழலை ஒழிப்பதிலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
வலுவான பொருளாதாரம் தேவை: தெற்கு தில்லி போஷ் பகுதியைச் சேர்ந்த சந்தியா (24), நிதி (22) ஆகியோர் கூறுகையில், "நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. அடுத்ததாக வரும் அரசு நல்ல நிதிக் கொள்கைகளுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சமீப காலங்களில் நமது பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது' என்றனர்.
வாக்களிப்பது அவசியம்: வடமேற்கு, ரிதாலா பகுதியைச் சேர்ந்த லட்சுமி முகேரியா கூறுகையில், "ஜனநாயகத்தில் வாக்களிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதை அனைவரும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்' என்றார்.
21 வயது நிரம்பிய கோமலி பெர்னி கூறுகையில், "வாக்களிக்கும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக கடந்த ஓராண்டாக காத்திருந்தேன். எனது வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காததால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்களிக்க முடியாமல்போனது. அதனால், தற்போதைய தேர்தல் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். வாக்களித்தது அதிகாரம் பெற்றதாக உணரச் செய்துள்ளது' என்றார்.