அரை மணி நேரம் சேவை நிறுத்தம்
By புது தில்லி | Published on : 12th April 2014 12:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தில்லி மெட்ரோ ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் ஜஹாங்கீர்புரியில் இருந்து ஹுடா சிட்டி சென்டருக்கு செல்லும் ரயில் தடத்தில் அரை மணிநேரம் சேவை நிறுத்தப்பட்டது.
ஜஹாங்கீர்புரியில் இருந்து ஹுடா சிட்டி சென்டருக்கு செல்லும் மெட்ரோ ரயில், வெள்ளிக்கிழமை மதியம் 1.04 மணிக்கு அராஜன்கார் மற்றும் கிதோர்னி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரயிலின் கடைசிப் பெட்டியில் புகை மற்றும் தீப்பொறி ஏற்பட்டதாக அங்கிருந்த பயணிகள் ரயிலின் ஓட்டுநருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, உடனடியாக அவசர பிரேக்கை பயன்படுத்தி, ரயிலிலிருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர். ரயிலில் சோதனை நடத்தியதில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்பது தெரிய வந்தது. அதன்பின் ரயில் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
இதுகுறித்து டிஎம்ஆர்சி செய்தித் தொடர்பாளர் அனுஷ் தயாள் கூறுகையில், "பொது மக்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை முழுவதும் பரிசோதனை செய்த பின்பே இயக்கிவருகிறோம். ரயிலில் புகையும், தீப்பொறியும் ஏற்பட்டதாகப் பயணிகள் தெரிவித்ததால், உடனடியாக ரயிலை நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. எந்த நிலையிலும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படாதவாறு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது. எனினும், மதியம் 1.35 மணிக்கு மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கினட என்றார்.
ஜஹாங்கீர்புரி மற்றும் ஹுடா சிட்டி சென்டர் இடையே சுமார் அரைமணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் அந்த வழியாகச் சென்ற பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். இது குறித்து தில்லி தீயணைப்பு துறை மூத்த அதிகாரி கூறுகையில், "மெட்ரோ ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு உடனடியாக 5 தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டன' என்றார்.