Enable Javscript for better performance
தில்லி உயர் நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாக ஜி. ரோஹிணி ஏப்ரல் 15-இல் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி உயர் நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாக ஜி. ரோஹிணி ஏப்ரல் 15-இல் பொறுப்பேற்பு

    By புது தில்லி  |   Published on : 12th April 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஜி. ரோஹிணி (58) ஏப்ரல் 15-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். அவருக்கு தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவரது பதவிக் காலம் நான்கு ஆண்டுகளாகும். தில்லி உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே தலைமை நீதிபதி பதவிக்கு நியமிக்கப்படும் முதலாவது பெண் நீதிபதி ரோஹிணி என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 1955, ஏப்ரல் 14-ஆம் தேதி பிறந்த ரோஹிணி, விசாகப்பட்டினத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் பயின்றார். 1980-ஆம் ஆண்டில் வழக்குரைஞராகப் பதிவு செய்த அவர், ஆந்திர சட்டப் புத்தகங்கள் குழுமத்தில் நிருபராகவும் பின்னர் அதே அமைப்பில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

    1985-ஆம் ஆண்டு முதல் அரசு வழக்குரைஞராக சில ஆண்டுகள் பணியாற்றிய அவர்,  உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக 2001-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். 2002,  ஜூலையில் அவர் ஆந்திர உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

    ஆந்திர மாநில சிறார் சீர்திருத்தக் குழுவில் உறுப்பினராகவும் அம் மாநிலச் சட்ட உதவி ஆணையத் தலைவராகவும் இருந்துள்ளார்.

    நீதிபதி அந்தஸ்து பெற்ற ஆந்திர நீதித் துறை கல்லூரியின் தலைவராகப் பணியாற்றிவரும் வேளையில், அவரை தில்லி உயர் நீதிமன்றத்  தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத் தேர்வுக் குழு அண்மையில் பரிந்துரை செய்தது. அதைத் தொடர்ந்து, அவரை நியமிப்பதற்கான ஆணையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்தார்.

    நீதிபதி என்றபோதும் எழுத்துத் துறையில் ரோஹிணி தனி ஆர்வம் கொண்டுள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் "பெண்களும், மனித உரிமை பாதுகாப்பும்' என்ற பெயரில் புத்தகத்தை எழுதி அவர் வெளியிட்ட படைப்பு, ஆந்திர மாநிலத்தில் பெண்ணுரிமைக்காக போராடிவரும் பலருக்கும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. அவர் ஆந்திர உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதியாக இருந்தபோது, ஊடகங்களில் வரும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களை தானாக முன்வந்து வழக்காக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    பிற்படுத்தப்பட்டோருக்கு ஆந்திர மாநில பஞ்சாயத்துகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என இவர் அளித்த தீர்ப்பும் அம் மாநில உள்ளாட்சித் துறை இடஒதுக்கீடு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.

    தில்லி உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதியாக இருந்த லீலா சேட் பதவி உயர்வு பெற்று ஹிமாசல பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது நீதிபதி பி.டி. அகமது தில்லி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பொறுப்பை தாற்காலிகமாக வகித்துவருகிறார். உயர் நீதிமன்றத்தில் உள்ள 40 நீதிபதிகளில் ஒன்பது பேர் பெண்கள் என்பது

    குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai