Enable Javscript for better performance
தில்லி நர்சரி மாணவர் சேர்க்கைக்கு  உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை- Dinamani

சுடச்சுட

    

    தில்லி நர்சரி மாணவர் சேர்க்கைக்கு  உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

    By புது தில்லி,  |   Published on : 12th April 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் உள்ள நர்சரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

    இது தொடர்பாக வேறு மாநிலத்தில் இருந்து தலைநகருக்கு மாற்றலான பெற்றோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான அமர்வு, நர்சரி மாணவர் சேர்க்கை நடைமுறை தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தில்லி அரசுக்கு உத்தரவிட்டது.

     தில்லியில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளதால், துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அலுவலகம் நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு பதில் அளிக்கும்.

     தில்லியில் நர்சரி வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க துணைநிலை ஆளுநர் அறிமுகப்படுத்திய சேர்க்கை வழிகாட்டுதல் நெறிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த பிப்ரவரியில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, பள்ளிக்கு அருகே வசிப்போருக்கு 70 புள்ளிகள், பள்ளியில் ஏற்கெனவே பயிலும் குழந்தையின் உடன் பிறந்தவர் என்றால் 20 புள்ளிகள், முன்னாள் மாணவர்களின் குழந்தைகள் என்றால் அதற்கு 5 புள்ளிகள் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த 95 புள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து மாணவர்களைச்  சேர்ப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகக் கூறி தனியார் பள்ளி நிர்வாகங்கள், நர்சரி பள்ளிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டன.

     அதை விசாரித்த உயர் நீதிமன்றம், துணைநிலை ஆளுநர் அறிவித்த வழிகாட்டுதல்களின்படி மாணவர் சேர்க்கையைத் தொடரலாம் என்றும், வேறு மாநிலங்களில் இருந்து தில்லிக்கு மாற்றலாகி வரும் பெற்றோரின் குழந்தைகள் தொடர்பாக பின்னர் முடிவெடுக்கலாம் என்றும் கடந்த வாரம் உத்தரவிட்டு வழக்கை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

     இந் நிலையில், வேறு மாநிலத்தில் இருந்து மாற்றலாகி வரும் பெற்றோரின் குழந்தைகளை எந்த அடிப்படையில் சேர்ப்பது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தாததால், அவர்களின் குழந்தைகள் நர்சரி வகுப்புகளில் சேர்வதில் குழப்பம் நீடித்தது. சில பள்ளிகளில் இக் காரணத்தைக் குறிப்பிட்டு மாணவர் சேர்க்கை மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம். லோதா அடங்கிய அமர்வு, மாணவர் சேர்க்கையை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai