Enable Javscript for better performance
முலாயம் சிங்குக்கு \\\"நிர்பயா\\\' பெற்றோர் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    முலாயம் சிங்குக்கு "நிர்பயா' பெற்றோர் கண்டனம்

    By புது தில்லி,  |   Published on : 12th April 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "பாலியல் குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது தவறு' என்று கருத்து வெளியிட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு தில்லியில் பாலியல் சம்பவத்தால் உயிரிழந்த துணை மருத்துவ மாணவியின் (நிர்பயா) பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    மக்களவைத் தேர்தலையொட்டி உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாதில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் முலாயம் சிங் யாதவ் பேசினார். அப்போது "பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை அளிக்கத் தேவையில்லை. நம் நாட்டில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். மத்தியில் சமாஜ்வாதி கட்சி தலைமையில் ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால் மரண தண்டனையை ஒழிப்போம். இளைஞர்கள் தவறு செய்வது சகஜமானதுதான். அதற்காக அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்படக் கூடாது' என்று முலாயம் பேசினார்.

    இந்தக் கருத்து பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியது. தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவியின் (நிர்பயா) பெற்றோர் முலாயம் பேச்சால் மிகவும் கவலையடைந்தனர்

     முலாயம் பேச்சு குறித்து அவர்களிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, "பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டு வன்கொடுமை இழைத்தவர்களுக்கு சாதகமாக முலாயம் போன்ற தலைவர்கள் பேசுவது கவலை அளிக்கிறது. இதுபோன்ற தலைவர்களை ஆட்சி அதிகாரத்தில் வர விடாமல் செய்யும் பொறுப்பு வாக்காளர்களுக்கு உள்ளது. பாலியல் கொடுமைக்கு ஆளானதால் மகள்களை இழந்து வாடும் எங்களைப் போன்ற பெற்றோர் இந்தியாவில் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காகக் குரல் கொடுக்கத் தயக்கம் காட்டும் அரசியல் தலைவர்கள், பாலியல் குற்றவாளிகளுக்குத் தண்டனையைக் குறைக்க கோரி வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது' என்றனர்.

    மகளிர் ஆணையம் கண்டனம்: இந் நிலையில், முலாயம் சிங் யாதவின் கருத்துக்கு தில்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்தது. மேலும், சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டது தொடர்பாக மூன்று நாள்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் முலாயம் சிங் யாதவுக்கு ஆணையத்தின் தலைவர் மம்தா சர்மா நோட்டீஸ் அனுப்பி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மம்தா சர்மா கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai