Enable Javscript for better performance
\\\"மோடியின் செல்வாக்கால் காங்கிரஸுக்கு அச்சம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "மோடியின் செல்வாக்கால் காங்கிரஸுக்கு அச்சம்'

    By புது தில்லி,  |   Published on : 12th April 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் அதிகரித்துவரும் செல்வாக்கை கண்டு காங்கிரஸ் கட்சிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக தெரிவித்திருக்கிறது.

    இது தொடர்பாக அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

    உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாதில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் "பாலியல் பலாத்கார குற்றம் செய்த இளைஞர்களை தூக்கில் போடுவது தவறு' என்றார். பெண்களைப் பாதுகாக்கும் வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜவாதி கட்சி தலைமையிலான அரசு எந்தச் சட்டத்தையும் இதுவரை இயற்றவில்லை. உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பொறுப்பற்ற முறையில் ஆட்சி செய்துவருகிறார். பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்து வரும் சட்டங்களையும் அவரது அரசு ஏற்கெனவே நீர்த்துப் போகச் செய்துவருகிறது.

    மோடி தன் வேட்புமனுவில் மனைவியின் பெயரை குறிப்பிட்டது பற்றி கேள்வி எழுப்புவதில் ஆர்வம் காட்டும் காங்கிரஸ், முலாயம் சிங் யாதவின் பொறுப்பற்ற பேச்சு பற்றி கருத்து வெளியிடாமல் ஏன் மௌனம் சாதிக்கிறது? தில்லியில் தேசிய மகளிர் ஆணையத்தின் செயல்பாடு மிகவும் பலவீனமாக இருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். இப் பிரச்னைகளுக்கு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அரசை வெளியேற்றுவதன் மூலம்தான் தீர்வு காணப்படும். அந்த முடிவை மக்கள் எப்போதோ எடுத்துவிட்டார்கள்.

    நரேந்திர மோடியின் செல்வாக்கு நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைக் கண்டு காங்கிரஸுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் மிகவும் மலிவான முறையில் தனது வலைதளத்தில் விளம்பரம் வெளியிட்டு காங்கிரஸ் ஆதாயம் தேட முயற்சிக்கிறது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்துவிட்டது.

    மோடியை நேரடியாக எதிர்க்கத் துணிவின்றி, அவரைப் பற்றி வாஜ்பாய் கூறியதாக கருத்தை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி இது. இதற்காக காங்கிரஸ் எந்த தாழ்ந்த நிலைக்கும் இறங்கிச் செல்லும் என்றார் நிர்மலா சீதாராமன்.

    இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சிறந்த தலைவராக காங்கிரஸ் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது' என்றார்.

    காங்கிரஸ் என்ன கூறியது?: கடந்த வியாழக்கிழமை இரவு காங்கிரஸ் வலைதளத்தில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் படம் இடம்பெற்ற விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில், "2002-ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என அப்போதைய பிரதமர் வாஜ்பாய், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினீர்கள்.

    வாஜ்பாய் அவர்களே, முதல்வர் பதவிக்கு தகுதியில்லாதவர் நரேந்திர மோடி என்று கூறியுள்ள நிலையில், நாட்டின் எதிர்காலத்தை அவரிடமா ஒப்படைப்பீர்கள்?' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

    இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் பாஜக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai