Enable Javscript for better performance
வாக்களிக்க முடியாததால் தலைநகரில் திபெத்தியர்கள் ஏமாற்றம்!- Dinamani

சுடச்சுட

    

    வாக்களிக்க முடியாததால் தலைநகரில் திபெத்தியர்கள் ஏமாற்றம்!

    By புது தில்லி,  |   Published on : 12th April 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் நீண்ட காலமாக வசிக்கும் ஏராளமான திபெத்தியர்கள் வாக்களிக்க விரும்பியபோதும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அவர்களால் மக்களவைத் தேர்தலில் வாக்குரிமை செலுத்த முடியவில்லை. இதனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    திபெத்திய பகுதியை சீனா ஆக்கிரமித்தபோது, அங்கிருந்து கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தப்பித்து இந்தியாவில் லட்சக்கணக்கான திபெத்தியர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். அவர்கள் நாட்டின் பல பகுதிகளில் தங்கியுள்ளனர். தற்போது சுமார் 1.20  லட்சம் திபெத்தியர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

     தில்லி சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மஜ்னு கா டிலா பகுதியில் சுமார் 350 திபெத்திய குடும்பங்கள் உள்ளன. இவர்களில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர்களும் வசிக்கின்றனர். அகதிகளாக வாழும் இம் மக்கள் தங்களுக்கு வாக்குரிமையும், குடியுரிமையும் அளிக்க வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்  இடம்பெற வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். இந்திய குடிமக்களாக இல்லாததால் திபெத்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்குவதற்குக் கொள்கை அளவில் மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்த்து வருகிறது.

    இதனிடையே, கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிறப்பித்த உத்தரவில்,  இந்தியாவில் 1950 முதல் 1987-ஆம் ஆண்டு இடையிலான காலத்தில் வசித்த திபெத்தியர்களின் வம்சாவளி வாரிசுகளின் பெயர்களை வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தற்போதைய மக்களவைத் தேர்தலில் திபெத்தியர்களின் வாரிசுகளின் பெயரைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க

    உத்தரவிட்டது.

    மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் உரிமையை தில்லியில் வசிக்கும் திபெத்திய வம்சாவளி அகதிகள் பெற உள்ளதாக தில்லித் தலைமைத் தேர்தல் அதிகாரி விஜய் தேவ் அண்மையில் தெரிவித்திருந்தார்.  நாட்டில் 1950-ஆம் ஆண்டில் முதல் 1987-ஆம் ஆண்டு வரைக்குள் பிறந்து, இந்தியாவில் நிரந்தரமாக வசித்துவரும் திபெத்திய அகதிகளின் வாரிசுகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

    எனினும், தில்லியில் வசிக்கும் திபெத்தியர்கள் பலரது பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    தில்லியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது.   இதில், சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மஜ்னு கா டிலா பகுதியைச் சேர்ந்த திபெத்திய வம்சாவழியினர் பலரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறாததால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்ற அடைந்ததாகக் கூறப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கான ஆவணங்களை தில்லி தேர்தல் ஆணையம் சரிபார்க்க முடியாததால் பட்டியலில் பலரது பெயரும் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

    எனினும், தில்லி பகுதியில் கணிசமான எண்ணிக்கையில் திபெத்தியர்கள் மக்களவைத் தேர்தலின்போது வாக்களித்துள்ளது குறிப்பிடத் தக்கது. கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு தங்களுக்கு சாதகமான தீர்ப்பை அளித்தபோதிலும், வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கப் பெறாததால் தங்களால் வாக்களிக்க இயலவில்லை என்று மஜ்னு கா டிலா பகுதி திபெத்தியர்கள் சிலர் கூறினர்.

    திபெத்திய காலனியைச் சேர்ந்த குடியிருப்பு நலச் சங்கத்தின் தலைவர் கேதேன் ட்செரிங் கூறுகையில், "போதிய குடியிருப்பு சான்றுகள் இல்லாததன் காரணமாவும் குறைவான கால அவகாசம் காரணமாகவும் எங்களில் சிலர் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டைக்காக பதிவு செய்துள்ளோம்' என்றார்.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கருத்தைப் பெற முயன்றபோது உரிய தகவல்களை அளிக்க தில்லி தேர்தல் ஆணைய அலுவலர்கள்

    மறுத்துவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai