Enable Javscript for better performance
இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் வழக்கு:ஊடக செய்திக்கு என்.ஐ.ஏ. விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் வழக்கு:ஊடக செய்திக்கு என்.ஐ.ஏ. விளக்கம்

    By புது தில்லி,  |   Published on : 13th April 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சில ஊடகங்களில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது போல் இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் தொடர்பான வழக்கில் இருந்து விலகி இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தங்களை ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை என்று தேசிய புலனாய்வு ஏஜென்ஸி (என்.ஐ.ஏ.)விளக்கம் அளித்துள்ளது.

    இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஜியா உர் ரகுமான் (எ) வகாஸ், தெஹ்சீன் அக்தர் (எ) மோனு ஆகிய இரு பயங்கரவாதிகளை காவலில் எடுப்பது தொடர்பாக தில்லி நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி தில்லி காவல் துறைக்கும் தேசிய புலனாய்வு ஏஜென்ஸிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இரு தரப்பினர் இடையே தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தால் கோபமடைந்த நீதிபதி, அவர்களை வெளியேற உத்தரவிட்டார். பின்னர், நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு இரு பயங்கரவாதிகளையும் தில்லி போலீஸார் 13 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இதனிடையே, இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் தொடர்பான வழக்குகளை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸார் விசாரிக்கும் வகையில், விலகி இருக்குமாறு தேசியப் புலனாய்வு ஏஜென்ஸிக்கு (என்.ஐ.ஏ.) மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை என்.ஐ.ஏ. மறுத்துள்ளது.

    இதுகுறித்து என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

    இந்திய முஜாஹிதீன் பயங்கரவாதிகள் தொடர்பான வழக்கில் இருந்து விலகி இருக்குமாறு உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏ.வை கேட்டுக் கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை. என்.ஐ.ஏ. செய்தித் தொடர்பாளரிடம் தொடர்பு கொண்டு உரிய தகவல்களைப் பெறாமல் ஒருதலைப்பட்சமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தில்லி உயர் நீதிமன்றம் முன்பு வெளியிட்ட இது தொடர்பான உத்தரவு குறிப்பாக கடந்த மார்ச் 20-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவு தில்லி உயர் நீதிமன்ற இணையதளத்தில் உள்ளது.

    எனவே, தேசிய புலனாய்வு ஏஜென்ஸி தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உண்மைத் தகவல்களை உறுதிப்படுத்தி ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்று என்.ஐ.ஏ. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai