Enable Javscript for better performance
கண்காணிப்புக் குழு அமைக்க துணைநிலை ஆளுநருக்கு பாஜக கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கண்காணிப்புக் குழு அமைக்க துணைநிலை ஆளுநருக்கு பாஜக கோரிக்கை

    By புது தில்லி  |   Published on : 13th April 2014 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : தில்லியில் நீடிக்கும் நர்சரி, தொடக்கப் பள்ளி மாணவர் சேர்க்கை பிரச்னைக்குத் தீர்வு காண கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கு பிரதேச பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

    அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: "அனைவருக்கும் கல்விச் சட்டத்தின் கீழ் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரசு இலவசக் கல்வி அளிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இவ்வாறு, தனியார் பள்ளிகளில் சேரும் ஏழைக் குழந்தைகளிடம் நன்கொடை, கட்டணம் வசூலிக்கக் கூடாது. அக் குழந்தைகள் தொடக்கக் கல்வியை நிறைவு செய்யும் வரையில் பள்ளியின் வருகைப் பதிவேட்டிலிருந்து பெயர் நீக்கம் செய்யவோ, தேர்வில் ஃபெயிலாக்கவோ கூடாது.

    ஆனால், நாட்டில் அரசியல் சாசனம் அமலாகி 60 ஆண்டுகளுக்குப் பின்னர், கோடிக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு இலவசத் தொடக்கக் கல்வி பெறும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டின் தலைநகர் தில்லியில் உள்ள தனியார் பள்ளிகளில் "அனைவருக்கும் கல்வி சட்டம்' அமலாகாதது வருத்தத்தை அளிக்கிறது. இந் நிலையில் நர்சரி, தொடக்கப் பள்ளி சேர்கை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. இதையடுத்து, நர்சரி, தொடக்கப் பள்ளி மாணவர் சேர்க்கை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    தில்லி மாஸ்டர் பிளான் படி 5 ஆயிரம் பேர் வசிக்கும் பகுதியில் ஓர் தொடக்கப் பள்ளி, 10 ஆயிரம் பேர் வசிக்கும் பகுதியில் நடுநிலைப் பள்ளி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தில்லியில் மொத்தம் 4,442 பள்ளிகளே உள்ளன. 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இக் காலிப் பணியிடங்களில் தாற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இச் சூழலில் அனைவருக்கு கல்விச் சட்டத்தை அமலாக்குவதில் சிக்கல் உள்ளது. குறிப்பாக தில்லியின் புறநகர், கிராமப்புறப் பகுதியில் உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 66 சதவீதமான நர்சரி, தொடக்கப் பள்ளிகளில் கழிப்பிட வசதியில்லை என தெரியவந்துள்ளது.

    இந் நிலையில் நர்சரி, தொடக்கப் பள்ளி சேர்க்கையில் நீடிக்கும் பிரச்னைக்குத் தீர்வு காண கல்வியாளர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். அக் குழு துணை நிலை ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஏழைக் குழந்தைகள் அனைவருக்கும் நர்சரி, தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்து படிப்பதை அக் குழு உறுதி செய்ய வேண்டும். பெற்றோர்கள் அளிக்கும் புகாரு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கடிதத்தில் ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai