Enable Javscript for better performance
நாட்டின் வளர்ச்சியில் தலைமைப் பண்பு முக்கியப் பங்காற்றும்- Dinamani

சுடச்சுட

    

    நாட்டின் வளர்ச்சியில் தலைமைப் பண்பு முக்கியப் பங்காற்றும்

    By புது தில்லி,  |   Published on : 13th April 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாக தலைமைப் பண்பு முக்கியப் பங்காற்றும் என்று முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

    தில்லி பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது வணிக மாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் மாணவர்கள் முன்னிலையில் பேசியதாவது:

    தலைமைப் பண்புடையவர்களாக மாறுவது என்பது கனவாக மட்டும் இருக்கக் கூடாது. அது உணர்வுகளின் மூலம் வெளிப்பட்டு செயலாகவும் மாற வேண்டும். வரும் 2030-ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதில் தலைமைப் பண்பு மிக்கவர்களின் பங்கு மிகப்பெரிய அளவில் இருக்கும்.

    புதுமையான தீர்வுகள் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண மாணவர்கள் முன்வர வேண்டும். கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்படுவதற்கு, புவியியல் மற்றும் அரசியல் ரீதியாக எப்போதும் எந்த தடையும் இருந்தது இல்லை என்பதை மாணவர்கள் உணர வேண்டும். விரைவில் எல்லை கடந்த கருத்துப் பரிமாற்றங்கள் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    சமீபத்தில் பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில், கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களுடன் இந்தியரும் இணைந்து ஆஸ்திரேலிய வங்கியின் பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடித்தது பன்னாட்டு கலாசாரத்துக்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

    வரும் 2030-ஆம் ஆண்டு உலக நாடுகள் அனைத்திலும் கிராமம், நகரம், ஏழை, பணக்காரர், வளர்ந்துவரும்-வளர்ச்சியடைந்த நாடுகள் போன்ற பாகுபாடுகள் வெகுவாகக் குறையும் என்றார் அப்துல் கலாம்.

    நிகழ்ச்சியின் முடிவில் கலாமிடம் மாணவர்கள் கேள்வி எழுப்பினர். இந்தியாவில் நிலவும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்ட கேள்விக்கு அப்துல் கலாம் பதலளிக்கையில், "சுய-நேர்மையுடையவர்கள் என்ற எண்ணம் இளைஞர்களின் மனதில் முதலில் பதிய வேண்டும். அப்போதுதான் ஊழல் என்ற தீய சக்தியை நாட்டிலிருந்து விரட்ட முடியும். சுய-நேர்மை என்ற எண்ணத்தை அரசு வழங்காது. அது நம்முள் இருந்து எழ வேண்டும்' என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai