லிப்டில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலாளி மீது புகார்
By புது தில்லி | Published on : 13th April 2014 12:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குர்கானில் இளம்பெண் லிப்ஃடில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக தனியார் நிறுவன காவலாளி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குர்கான் செக்டர்-40 காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய் பிரகாஷ் கூறியதாவது: வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பெண் குர்கானில் உள்ள வாடகை வீட்டில் தனது தோழியுடன் தங்கியுள்ளார். குர்கானில் உள்ள சுஷாந்த் லோக் பகுதி உணவு
விடுதியில் வேலை செய்து வருகிறார். ஏப்ரல் 9-ஆம் தேதி வழக்கமாக வேலை முடிந்த பிறகு தனது தோழியுடன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அங்குள்ள ஐவரி டவரில் இருவரும் வந்து கொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லிப்ட் பாதியில் நின்றது. இதையடுத்து, அவசரகால பட்டனை அப் பெண் அழுத்தியுள்ளார். இதையடுத்து, அக் கட்டடத்தின் காவலாளி ரிங்கு என்பவர் அங்கு சென்று இருவரையும் மீட்க வந்தார். அப்போது, 19 வயது பெண்ணை அவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. லிஃப்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரிங்கு முறைகேடாக நடந்தது தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிங்கு, ஒன்றரை மாதங்களாக ஐவரி டவரில் வேலை செய்துவருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்றார் இன்ஸ்பெக்டர் ஜெய் பிரகாஷ்.