Enable Javscript for better performance
கடைக்காரரிடம் கொள்ளையடித்த வழக்கில் 2 இளைஞர்களுக்கு சிறை- Dinamani

சுடச்சுட

    

    கடைக்காரரிடம் கொள்ளையடித்த வழக்கில் 2 இளைஞர்களுக்கு சிறை

    By புது தில்லி,  |   Published on : 14th April 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடைக்குள் புகுந்து உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்த வழக்கில் இரு இளைஞர்களுக்கு ஏழு மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    இரு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த வழக்கு விவரம் வருமாறு: தில்லி பீதம்புரா பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் யாதவ். இவர் அப் பகுதியில் கடை நடத்திவருகிறார். சம்பவத்தன்று நாங்லாய் பகுதியைச் சேர்ந்த ரோஹித் சோனி (27), சஞ்சய் குமார் (24) இருவரும் உமேஷ் யாதவ் கடைக்குள் புகுந்து அவரை துப்பாக்கி முனைனையில் மிரட்டி செல்போன், பணம் கொள்ளையடித்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, இருவரையும் பீதம்புரா போலீஸார் கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது, "15.12.2011 அன்று இரவு சோனி, குமார் இருவரும் உமேஷ் யாதவின் கடைக்குள் புகுந்து அவரை துப்பாக்கியால் மிரட்டினர். பின்னர், அவரிடமிருந்து செல்போன், ரூ. 42 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பினர்.

    இது குறித்து உமேஷ் யாதவ் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். சஞ்சய் குமாரின் வீட்டில் இருந்து செல்போன் மீட்கப்பட்டது' என்று அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

     இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி காமினி லா அளித்த தீர்ப்பு: குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றமும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவரும் புதிதாக இந்தக் குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதும், ஏற்கெனவே இருவரும் 8 கொள்ளை, திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆகவே, குற்றம்சாட்டப்பட்ட சோனிக்கு 7 ஆண்டுகள், குமாருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. தில்லியில் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்துவருவது கவலை அளிக்கச் செய்வதாக உள்ளது. பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்குமான பாதுகாப்பு விஷயத்தில் கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆகவே, இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்' என்று நீதிபதி குறிப்பிட்டார்.

    முன்னதாக, "எங்கள் இருவர் மீதும் பொய் வழக்குப் புனையப்பட்டுள்ளது' என்று குற்றம்சாட்டப்பட்ட இருவரும் முறையிட்டனர். அதை நீதிபதி நிராகரித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai