கணவன், மனைவிக்கு 7 ஆண்டு சிறை
By புது தில்லி, | Published on : 14th April 2014 12:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்த வழக்கில் எய்ட்ஸ் நோய் பாதித்த கணவர், அவரது மனைவி ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு: தில்லியை சேர்ந்த தம்பதியினர், அடுத்தவரின் வீட்டுக்குள் அத்துமீறு நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கி ரூ. 8 ஆயிரம் ரொக்கம், தங்க மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்ததாகப் புகார் எழுந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணையின்போது, "கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி புகார்தாரரின் வீட்டில் ஏற்கெனவே பணிப் பெண்ணாக வேலை செய்த நபரும் அவரது கணவரும் அத்துமீறி நுழைந்தனர். பின்னர், வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிவிட்டு ரூ. 8 ஆயிரம் ரொக்கம், தங்க மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்ப முயன்றனர். அப்போது, புகார்தாரரின் குடும்பத்தினரின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது, தப்ப முயன்ற பெண் பிடிபட்டார். அவரது கணவர் மறுதினம் கைது செய்யப்பட்டார்' என்று அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி யஷ்வந்த் குமார் அளித்த உத்தரவில்,"கணவர், மனைவி மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நிகழ்வது அதிகரித்துவருகிறது. இவை தடுக்கப்பட வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.
முன்னதாக, "எங்கள் இருவர் மீதும் போலீஸார் பொய் வழக்கை ஜோடித்துள்ளனர். நான் (கணவர்) எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆகவே, என்னையும் எனது மனைவியையும் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்' என்று கணவர் முறையிட்டார். அதை நீதிமன்றம் நிராகரித்தது.