Enable Javscript for better performance
குஜராத் கலவரம்: வாஜ்பாயுடனான கடித விவரங்களை வெளியிடலாமா?- Dinamani

சுடச்சுட

    

    குஜராத் கலவரம்: வாஜ்பாயுடனான கடித விவரங்களை வெளியிடலாமா?

    By புது தில்லி,  |   Published on : 14th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குஜராத் கலவரத்தின்போது அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடனான கடிதப் போக்குவரத்து விவரங்களை வெளியிடுவது குறித்து, அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியின் கருத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது.

    இதுதொடர்பான விவரங்களை கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பிரதமர் அலுவலகத்தில் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டது.

    குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால், அந்த விவரங்களை அளித்தால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, மனுவை பிரதமர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் தள்ளுபடி செய்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலக இயக்குநருக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அதில், சரியான காரணம் தெரிவிக்காமல், மனுவை பொதுத் தகவல் அலுவலர் தள்ளுபடி செய்துள்ளதாகவும், 11 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் தொடர்பான விவரங்களையே கேட்டுள்ளதாகவும், அதனை அளிப்பதால் விசாரணையில் பாதிப்பு ஏற்படாது என்றும் வாதிடப்பட்டுள்ளது.

    அதையடுத்து, மனுதாரர் கேட்டுள்ள விவரங்களை 15 நாள்களுக்குள் அளிக்கும்படி பிரதமர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பொதுத் தகவல் அலுவலர் எஸ்.வி. ரிஸ்வி கூறுகையில், "தகவல் உரிமைச் சட்டத்தின் 11 (1) பிரிவின்படி, மூன்றாவது நபர் குறித்த தகவல்களைக் கேட்டு யாரேனும் விண்ணப்பித்தால், அந்த விவரங்களைத் தருவதற்கு முன் அந்த மூன்றாவது நபரின் கருத்து கேட்கப்பட வேண்டும்.

    இதே போன்ற வேறொரு கோரிக்கை தொடர்பாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. எனவே, தகவல் உரிமைச் சட்டத்தின் 11 (1) பிரிவில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளுக்குப் பிறகு, மனுதாரர் கேட்டுள்ள விவரங்கள் அளிக்கப்படும்' என்றார்.

    தகவல் உரிமைச் சட்டத்தின் 11ஆவது பிரிவின்படி, கருத்து கேட்கப்படும் 3ஆவது நபர் தனது பதிலை 5 நாள்களில் தெரிவிக்க வேண்டும். ஆனால் அதுபோன்று கால அளவு எதையும் நிர்ணயித்து மோடிக்கு பொதுத் தகவல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பவில்லை.

    பின்னணி: குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது ஏராளமானோர் பலியாகினர். இந்த சம்பவத்தின்போது நரேந்திர மோடிக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் இடையே 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி மற்றும் அதே ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி இடையே பரஸ்பரம் அனுப்பப்பட்ட அனைத்து கடிதங்களின் நகல்களையும் கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    அதில் குஜராத் கலவரத்தின்போது, அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும், மோடிக்கும் இடையே பரஸ்பரம் அனுப்பப்பட்ட கடிதங்களின் நகல்களை அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai