Enable Javscript for better performance
கேஜரிவால் நாளை வாராணசி பயணம்- Dinamani

சுடச்சுட

    

    ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) வாராணசி செல்கிறார்.

    வாராணசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ள அவர், அங்குள்ள சமுதாயத் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இது குறித்து ஆம்ஆத்மி கட்சியின் வாராணசியின் செய்தித் தொடர்பாளர் ராமானந்த் ராய் செய்தியாளர்களிடம்

    கூறியதாவது:

     பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை எதிர்த்து வாராணசியில் போட்டியிட உள்ளதாக அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். இதையடுத்து, அவர் செவ்வாய்க்கிழமை வாராணசிக்கு வருகிறார். அப்போது, சுவாமி அபிமுக்தேஷ்வரானந்த், ஷாகீர் காசி குலாம் நாசீர் உள்ளிட்ட மதத் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளார். அதேபோல் வாராணசியில் உள்ள ஊரகப் பகுதியான ரோஹாணியாவில் மக்களை சந்தித்தும் பேச உள்ளார். பின்னர் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள், ஆதரவாளர்களை சந்தித்து விவாதிக்க உள்ளார். ஏப்ரல் 16 முதல் 18-ஆம் தேதி வரை ரோஹாணியா, சேவாபுரி ஆகிய சட்டப்பேரவைக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார் ராமானந்த் ராய்.

     முன்னதாக கடந்த மாதம் வாராணசிக்கு சென்ற அரவிந்த் கேஜரிவால், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிப்பட்டார். அப்போது தாரா நகர் பகுதியில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான ஷியா மசூதிக்கு சென்று, முகமது அப்துல் ஜாபர் ஹுசைனி, ஜும்மா மசூதியின் இமாம் உள்ளிட்ட மதத் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாராணசி மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்க உள்ளது. நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடவுள்ளதாக அரவிந்த் கேஜரிவால் (ஆம்ஆத்மி) அறிவித்துள்ளார். மேலும், அஜய் ராய் (காங்கிரஸ்), கைலாஷ் செüராஸியா (சமாஜ்வாதி), விஜய் பிரகாஷ் ஜெய்ஸ்வால் (பகுஜன் சமாஜ்) ஆகியோர் களம் காணவுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai