Enable Javscript for better performance
டிராவல் நிறுவனம் நடத்தி மோசடி: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    டிராவல் நிறுவனம் நடத்தி சுற்றுலாப் பயணிகளிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக ஒருவரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

    இது தொடர்பாக தில்லியை சேர்ந்த மருத்துவர் ஆனந்த்குமார் கல்காஜி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு சஞ்சய் ராய்லி (50) என்பவரைக் கைது செய்தனர். இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் தெரிய வந்தன.

    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சஞ்சய் ராய்லியும் அவரது மகன் சாம்பவ் (24) ஆகிய இருவரும் இணைந்து மும்பை, சண்டீகர், தில்லி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆடம்பர நிறுவனம் போன்ற தோற்றத்தில் டிராவல் நிறுவனங்களை நடத்திவந்தனர்.

    இதில் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்காக பலர் பணத்தைச் செலுத்தியுள்ளனர்.  தில்லி மருத்துவரான ஆனந்த்குமார், ஐரோப்பாவில் சுற்றுலா செல்வதற்காக அந்த நிறுவனத்திடம் ரூ.15 லட்சம் கட்டணம் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு அந் நிறுவனத்தை மூடிவிட்டு தந்தையும் மகனும் தலைமறைவாகிவிட்டனர்.

     இது குறித்து ஆனந்த்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனிப் படை அமைக்கப்பட்டது. சஞ்சய் ராய்லி இருக்கும் இடம் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், சுமார் 200-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார்.

    முன்னதாக தந்தையும் மகனும் இணைந்து மல்ட்டி-லெவல் மார்க்கெட்டிங் திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது. இதில் சாம்பவ் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2009-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி போல் நடித்து பலரை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாம்பவ், இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai