Enable Javscript for better performance
தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட ஆம்ஆத்மி கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட ஆம்ஆத்மி கோரிக்கை

    By புது தில்லி,  |   Published on : 15th April 2014 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஆம்ஆத்மி வேட்பாளர்கள் தாக்கப்பட்டுள்ள விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று அக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக அக் கட்சி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: பிகார் மாநிலம், நாளந்தா மக்களவைத் தொகுதியின் ஆம்ஆத்மி வேட்பாளர் பிரணவ் பிரகாஷ் பயணம் செய்த காரை ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 30 பேர் கொண்ட கும்பல் தாக்கியது. இதில் காரின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. மேலும், அவரை வெளியே இழுத்து, இரும்புக் கம்பிகள், கைத்துப்பாக்கிகள் ஆகியவற்றைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நாளந்தா மாவட்டத் தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, சம்பவ இடத்துக்கு காலையில் வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

    இது போல, மற்றொரு சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலம், குண்ட்டி மக்களவைத் தொகுதியில் நிகழ்ந்துள்ளது. இத் தொகுதி ஆம்ஆத்மி வேட்பாளரும் சமூக ஆர்வலருமான தயாமணி பர்லாவும் அவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வரும் கட்சியினரும் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகின்றனர். அர்கி மண்டலத்தில் கடந்த 7-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ளச் சென்ற வாகனத்தை பிர்பங்கி என்ற இடத்தில் ஆயுதம் ஏந்திய அடையாளம் தெரியாத நபர்கள் மறித்து வாகனத்தின் சாவி, கட்சி ஆதரவாளர்களின் மொபைல் போன்களை பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து, கட்சியினர் நடந்தே அர்கி பகுதிக்கு இரவு 7 மணிக்குச் சென்றனர்.

    மற்றொரு சம்பவத்தில் இந்திய மக்கள் விடுதலை முன்னணி (பிஎல்எஃப்ஐ) அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆம்ஆத்மி ஆதரவாளர்களை ஏப்ரல் 9-ஆம் தேதி மிரட்டி, தேர்தல் பிரசாரம் செய்வதற்கு இடையூறு செய்தனர். கொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளனர்.

    ஆம்ஆத்மி கட்சி தேர்தலில் போட்டியிடுவதை விரும்பாத சிலர், இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மக்களவைத் தேர்தலில் எவ்வித அச்சமுமின்றி அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்வதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai