Enable Javscript for better performance
பதவியில் இருந்து விலகியது ஏன்?: கேஜரிவால் விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பதவியில் இருந்து விலகியது ஏன்?: கேஜரிவால் விளக்கம்

    By புது தில்லி  |   Published on : 15th April 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியே முதல்வர் பதவியில் இருந்து தாம் விலக நேரிட்டது என்று ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். இம் முடிவு எனது தனிப்பட்ட முடிவல்ல என்றும் அவர் கூறினார்.

    இதுகுறித்து ராஜ்தீப் சர்தேசாய் நடத்திய "கூகுள் ஹேங்அவுட்' நிகழ்ச்சியின்போது கேஜரிவால் பேசியதாவது:

    தில்லி பிரதேச ஆட்சியில் இருந்து நாங்கள் திடீரென பதவி விலகியதை நான் ஒப்புக்கொள்கிறேன். தில்லி சட்டப்பேரவையில் அவர்கள் (பாஜக, காங்கிரஸ்) அவை நடவடிக்கைகளில் ஏற்படுத்திய இடையூறு எல்லோரும் அறிந்தவைதான். இதனால்தான், நாங்கள் உடனடியாக பதவி விலக நேரிட்டது. ஆனால், நாங்கள் பதவி விலகுவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எங்களது திடீர் அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தது.

    மக்களிடம் பேசியிருக்க வேண்டும்: கொள்கைகளின் அடிப்படையில் கையெழுத்திடப்பட்டிருந்ததன் காரணமாக பதவியிலிருந்து விலகும் முடிவு சரியானதுதான். ஆனால், நாங்கள் பதவி விலகுவது தொடர்பாக 3-4 தினங்கள் மக்களிடம் சென்று ஆலோசித்திருந்தாலோ கேட்டுக்கொண்டிருந்தாலோ, சமாதானப்படுத்தியிருந்தாலோ மக்கள் புரிந்து கொண்டிருந்திருப்பார்கள். தகவல் தொடர்பு இடைவெளிதான் ஒரு தவறாகிவிட்டது.

    நாங்கள் பதவி விலகுவதற்கு முன்பு மக்களிடம் பேசியிருக்க வேண்டும். இதுதான் நாங்கள் செய்த தவறு. மேலும், நாங்கள் பதவி விலக மேற்கொண்ட முடிவு கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட கூட்டு முடிவாகும். பதவி விலகி ஒன்றரை மாத காலம் ஆகிவிட்டது. இதனால், மக்கள் மனதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சிக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கிவிட்டனர்.

    முக்தார் அன்சாரியிடம் ஆதரவு கோரவில்லை: அதேபோன்று வாராணசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிரான எனது போட்டியில் முக்தார் அன்சாரியின் ஆதரவை நாங்கள் கோரவில்லை. அவருடன் நாங்கள் இது தொடர்பாக எவ்வித சந்திப்பையும் மேற்கொள்ளவில்லை.

    அவரும் எங்களுக்கு எவ்வித ஆதரவையும் அளிக்க முன்வரவில்லை. தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று மட்டுமே முக்தார் அன்சாரி கூறினார். அது அவரைச் சார்ந்த விஷயம். ஆகவே, தேர்தலில் முக்தர் அன்சாரியின் ஆதரவைக் கோருவது என்ற கேள்விக்கே இடமில்லை. அவரிடம் நாங்கள் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்றார் கேஜரிவால்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai