Enable Javscript for better performance
மெட்ரோ ரயில் நிலையங்களில் \\\"போலீஸ் பூத்\\\'கள்- Dinamani

சுடச்சுட

    

    அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் "போலீஸ் பூத்'கள் (காவல் சாவடிகள்) அமைக்க தில்லி காவல் துறை திட்டமிட்டுள்ளது. அதிகரித்துவரும் குற்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, முதல் கட்டமாக 49 மெட்ரோ ரயில் நிலையங்களில் போலீஸ் பூத்கள் அமைக்க தில்லி காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தலைநகல் மக்கள் போக்குவரத்துக்கு தில்லி மெட்ரோ ரயில் ஒருங்கிணைப்பு மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. தினமும் சுமார் 25 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.

    இச் சூழலில், மெட்ரோ ரயில்களிலும் மெட்ரோ ரயில் நிலையப் பகுதிகளிலும் திருட்டு, வழிப்பறி, ஜேப்படி போன்ற சம்பவங்கள் நிகழ்வது அதிகரித்துவருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வரையிலான காலத்தில் திருட்டு, ஜேப்படி போன்ற 806 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் வெறும் 140 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.

    ரயில் நிலையப் பகுதியிலும் ரயில்களிலும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பை மேற்கொள்ளும் விதமாக 49 மெட்ரோ ரயில் நிலையங்களில் காவல் சாவடிகள் அமைக்க வேண்டும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு (டிஎம்ஆர்சி) காவல் துறை பரிந்துரை அனுப்பி வைத்திருந்தது. அப் பரிந்துரையை டிஎம்ஆர்சி ஏற்றுக் கொண்டது.

    இது குறித்து தில்லி காவல் துறையின் இணை ஆணையர் எம்.கே. மீனா கூறுகையில், " குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் 49 இடங்களில் தில்லி காவல் துறையின் காவல் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தலைநகரில் உள்ள 129 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இத்தகைய காவல் சாவடிகள் ஏற்படுத்துவதான் நோக்கம்.

    தற்போது தில்லி மெட்ரோவில் 209 போலீஸார் அடங்கிய எட்டு மெட்ரோ காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தில்லி, தில்லி எல்லைப் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இக் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கஷ்மீரி கேட், மண்டி ஹவுஸ், ஆனந்த் விஹார், நியூ அசோக் நகர், ஜஹாங்கீர்புரி ஆகிய மெட்ரோ நிலையங்கள் இப் பிரிவின் கீழ் வருகின்றன. தற்போது அமைய உள்ள காவல் சாவடிகள் பட்டியலில் படேல் சௌக், ரேஸ்கோர்ஸ், உத்யோக் பவன், எய்ம்ஸ் மெட்ரோ ரயில் நிலையங்களும் வருகின்றன' என்றார்.

    2013-ஆம் ஆண்டில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக 206 பேரை மெட்ரோ போலீஸார் கைது செய்தனர். இவர்களில் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஒருவர், கொள்ளை சம்பவத்தில் 6 பேர், வழிப்பறி சம்பவத்தில் ஒருவர், திருட்டு சம்பவத்தில் 22 பேர், ஜேப்படியில் ஈடுபட்டதாக 101 பேர், வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக 4 பேர், கன்னத் திருட்டில் ஈடுபட்டதாக 7 பேர், போதைப் பொருள் கடத்தியதாக 3 பேர், ஆயுதச் சட்டத்தின் கீழ் 10 பேர் அடங்குவர் என்று மெட்ரோ போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai