Enable Javscript for better performance
கடைவியாபாரிகளிடம் நூதன மோசடி: போலி மாஜிஸ்திரேட் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் கடை வியாபாரிகளிடம் நூதன முறையில் ஏமாற்றிப்  பணம் பறித்து வந்த போலி மாஜிஸ்திரேட் மற்றும் அவரது கூட்டாளியை போலீஸாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    இதுகுறித்து தில்லி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய தில்லி நபி கரிம் பகுதியைச் சேர்ந்தவர் கிஷன் லால் குப்தா (65). இவர் வடக்கு தில்லியின் கமலா மார்க்கெட்டில் வசித்து வருகிறார்.

    ஆயுர்வேத குளிர்பானங்கள் மொத்த விற்பனையாளராகவும் தொழில் நடத்தி வந்துள்ளார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந் நிலையில், சம்பவத்தன்று கமலா மார்க்கெட் பகுதியில் உள்ள கடைக்கு  மாஜிஸ்திரேட் போல கிஷன் லால் குப்தா சென்று மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக

    போலீஸாருக்குப் புகார் வந்தது. இதையடுத்து, கிஷன் லால் குப்தாவையும் அவரது கார் ஓட்டுநர் ராஜீவையும் போலீஸார் கைது செய்தனர்.

    இருவரிடம் நடத்திய விசாரணையின்போது கிஷன் லால் குப்தா நூதன முறையில் கடைக்காரரை ஏமாற்றி பணம் வசூலித்து வந்தது தெரிய வந்தது. மேலும், இச் செயலுக்கு ராஜீவ் (60) உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.

    சொகுசு காரில் பெரிய மார்க்கெட் பகுதிகளுக்கு கிஷன் லால் குப்தா செல்வார். அவரது கார் ஓட்டியாக ராஜீவ் உடன் செல்வார். பெரிய கடைகளுக்கு முன்னால் வாகனத்தை நிறுத்துவிடுவர். காருக்குள் பகட்டான உடையுடன் கிஷன் லால் அமர்ந்திருப்பார்.

    அக் காரின் முன்புறம் அரசு அடையாளச் சின்னம் கொண்ட வில்லை ஒட்டப்பட்டிருக்கும். கார் ஓட்டுநர் ராஜீவ், கடை வியாபாரிடம் சென்று பேச்சு கொடுப்பார். மாஜிஸ்திரேட் வெளியே காரில் அமர்ந்திருப்பதாகவும், கடையில் திடீர் சோதனை மேற்கொள்ள வந்திருப்பதாகவும் கூறுவார்.

    சோதனையில் விதிமீறல் கண்டறியப்பட்டால் மாஜிஸ்திரேட் அபராதம் விதிப்பார் என்றும் கடை உரிமத்தைக்கூட ரத்து செய்யும் அதிகாரம் அவருக்கு உண்டு என்றும் மிரட்டுவார். பிறகு மத்தியஸ்தம் செய்வதுபோல் ஒரு தொகையைப் பெற்றுக் கொண்டு கடையில் இருந்து வெளியே சென்றுவிடுவார்.

    இத் தொகையை கிஷன் லாலிடம் கொடுத்துவிட்டு அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை கமிஷனாக ராஜீவ் பெற்றுக் கொள்வார்.

    இவ்வாறாக மிரட்டி சில கடை வியாபாரிகளிடம் இருவரும் பணம் பறித்து மோசடி செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai