Enable Javscript for better performance
கபில் சிபலின் மகன் தொடர்ந்த கேஜரிவால் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    கபில் சிபலின் மகன் தொடர்ந்த கேஜரிவால் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    By dn  |   Published on : 16th April 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் உள்பட அக் கட்சியின் சில தலைவர்கள் மீது மத்திய அமைச்சர் கபில் சிபலின் மகன் அமித் கபில் தொடர்ந்த அவதூறு வழக்கின் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபலின் செல்வாக்கைப் பயன்படுத்தி, அவரது மகனும் வழக்குரைஞருமான அமித் சிபல் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வழக்குகளில் ஆஜராகி ஆதாயம் அடைந்ததாக ஆம்ஆத்மி கட்சித் தலைவர்கள் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.

    "வோடஃபோன் நிறுவனம் மத்திய அரசுக்குத் செலுத்த வேண்டிய ரூ. 11 ஆயிரம் கோடி வரி விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே அந்த நிறுவனத்துடன் சமரசம் செய்து கொள்ளும் மத்திய அமைச்சர் கபில் சிபலின் சட்ட முடிவுக்கு ஊழலே காரணம். வோடஃபோன் நிறுவனத்தின் பல்வேறு வழக்குகளில் கபில் சிபல் மகனும், உச்ச நீதிமன்ற வழக்குரைஞருமான அமித் சிபல் 2007-2009 வரை ஆஜராகியுள்ளார்' என்றும் அவர்கள் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டை கூறியிருந்தனர்.

    இதற்கு அமித் சிபல் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்கள் ஷாஸியா இல்மி, பிரசாந்த் பூஷண், மணீஷ் சிúஸாடியா ஆகியோர் மீது புது தில்லி பெருநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மாஜிஸ்திரேட் கடந்த ஜூலை 24-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

    இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் முறையீடு செய்தனர்.

    கடந்த ஜனவரி 16-ஆம் தேதி இந்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் அவர்களது கோரிக்கையை பரிசீலிக்குமாறு கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

    இந் நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமில் சிபல் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், "தனிப்பட்ட புகார் மனு மீதான விசாரணையை ரத்து செய்யக் கோரும் ஆம்ஆத்மி கட்சித் தலைவர்களின் கோரிக்கையை பரிசீலிக்கும் அதிகாரத்தை மாஜிஸ்திரேட்டுக்கு உயர் நீதிமன்றம் வழங்க முடியாது' என்று தெரிவித்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேஜரிவால் மற்றும் அக் கட்சியின் பிற தலைவர்களுக்கு கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

    இந் நிலையில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல். தத்து, எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, ஆம்ஆத்மி கட்சித் தலைவர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெயந்த் பூஷண், "உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான மனு பைசல் செய்யப்படும் வரை கீழமை நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

    அதற்கு, "உச்ச நீதிமன்றத்தில் உள்ள இந்த விவகாரம் தொடர்பான மனு விசாரணையை  விரைவுபடுத்த மட்டுமே முடியும்' என்று தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, கீழமை நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், மனு மீதான விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai