கொள்ளையனை அடித்துக் கொன்ற பொதுமக்கள்
By dn | Published on : 16th April 2014 12:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாத் அருகே வீடுகளில் கொள்ளையடிக்க முயன்றவரை உள்ளூர்வாசிகள் அடித்துக் கொன்றனர்.
காஜியாபாத் முராத்நகர் அருகே சுதாரி கிராமத்தில் உள்ள வீடுகளில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையடிக்க முயற்சித்தனர். அவர்கள் ராஜேந்திர பண்டிட் என்பவரின் வீட்டில் கொள்ளையடிக்கச் சென்றபோது அவரும், அவரது மனைவி சுனிதாவும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, கொள்ளையர்கள் மூவரும் சுவர் ஏறி அவரது வீட்டுக்குள் குதித்தனர்.
அப்போது அக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை ராஜேந்திர பண்டிட் நெற்றியில் வைத்து, பணம் மற்றும் விலையுள்ள பொருள்கள் அனைத்தையும் கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர்.
இந் நிலையில், ராஜேந்திர பண்டிட்டின் மனைவி சுனிதா அலார மணியை அழுத்தினார்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் விழித்துக் கொண்டு அங்கு திரண்டனர். இதைத் தொடர்ந்து, திருடர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். எனினும், அக் கும்பலில் இம்ரான் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினார். மற்ற இருவரும் தப்பிச் சென்றனர். பொதுமக்கள் அடித்து உதைத்ததில் இம்ரான் பலத்த காயமடைந்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இம்ரான் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். உயிரிழந்த இம்ரான், உத்தர பிரதேச மாநிலம் ஃபாரிக் நகரைச் சேர்ந்தவர் என்றும் அவருடன் கொள்ளையடிக்க முயன்றவர்கள் வாகில், நிஜாமுதீன் ஆகியோர் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இம்ரான் உயிரிழந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.