Enable Javscript for better performance
சகோதரர்கள் கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சகோதரர்கள் இருவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    தில்லி சுல்தான்புர் தபாஸ் பகுதியைச் சேர்ந்த ராகுல் (எ) கலா, சோனாபட் மாவட்டம் பரோனாவைச் சேர்ந்த ரவி (எ) மோனியா ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை காரில் தப்பிச் செல்ல முயன்ற போது தில்லிக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

    இதுகுறித்து தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் காவல் கூடுதல் ஆணையர் (குற்றப்பிரிவு) ரவீந்திர யாதவ் கூறியதாவது:

    சுல்தான்புர் தபாஸ் கிராமத்தில் மர்மமான முறையில் இரண்டு சகோதரர்கள் பிப்ரவரி 28-ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தனர். இதுகுறித்து பாவனா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ராகுல் (எ) கலா, ரவி (எ) மோனியா ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அவர்கள் இருவர் மீதும் ஏற்கெனவை குற்றவழக்குகள் இருந்ததாலும் இந்த வழக்கில் தலைமறைவு ஆனதாலும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் குறித்து துப்பு அளிப்பவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந் நிலையில், தில்லி வடக்கு காவல் இணை ஆணையர் குமார் கைனேஷ் உத்தரவின் பேரில், துணை ஆணையர் சஞ்சீவ் குமார் மேற்பார்வையில், ஆய்வாளர் விஜய் ரஸ்தோகி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் தேடப்பட்டு வந்தனர். இந் நிலையில், ராகுல், ரவி ஆகியோர் கேரா குர்து கிராமத்தில் இருந்து பிரஹலாத்புர் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 5 முதல் 7 மணிக்குள் செல்வதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அப் பகுதியில் தனிப் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.  அப்போது காரில் வந்த ராகுல், ரவி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து இரண்டு கைத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும், அவர்கள் இருவரும் தொலைபேசி வாயிலாக பலரை மிரட்டிப் பணம் பறிக்க திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் ரவீந்திர யாதவ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai