Enable Javscript for better performance
முன்னாள் மனைவியை ஆசிட் வீசி கொல்ல முயன்ற இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தனது முன்னாள் மனைவியை ஆசிட் வீசி கொலை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இவர் திஹார் சிறையில் இருந்து கடந்த 10 தினங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தவர் என்று  போலீஸார் தெரிவித்தனர்.

     இது குறித்து தில்லி போலீஸார் திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியைச் சேர்ந்தவர் முகம்மது சரிக். இவரும், தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு முகம்மது சரிக்கிற்கு பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்பு இருந்தது மனைவிக்குத் தெரிய வந்தது. இது தொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

     இதனிடையே, 2011-ஆம் ஆண்டில் கொள்ளை வழக்குத் தொடர்பாக திஹார் சிறையில் முகம்மது சரிக் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அவரை மனைவி விவகாரத்து செய்தார். இந் நிலையில், முகம்மது சரிக் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

     அப்போது, தன்னுடைய முன்னாள் மனைவிக்கும், மற்றொருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தனது நண்பர்கள் மூலம் அவருக்குத் தெரிய வந்தது.

     இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை மத்திய தில்லியில் உள்ள சாந்தி மகாலில் வசிக்கும் தனது முன்னாள் மனைவியின் வீட்டுக்குச் சென்றார் முகம்மது சரிக். வீட்டுக் கதவைத் தட்டியதும், அவரது முன்னாள் மனைவி கதவைத் திறந்து பார்த்தபோது, "நான் ஆசிட் வீசி உன்னைக் கொல்லப் போகிறேன்' என்று சரிக் கூறியுள்ளார். இதையடுத்து, அப் பெண் அலறினார்.

    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டனர். பின்னர், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் முகம்மது சரிக்கை அப் பகுதி மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai