Enable Javscript for better performance
வெறுப்பைத் தூண்டும் வகையில் பேச்சு: உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு - Dinamani

சுடச்சுட

    

    வெறுப்பைத் தூண்டும் வகையில் பேச்சு: உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

    By dn  |   Published on : 16th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசியல் கட்சியினர் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது மூத்த அரசியல் கட்சித் தலைவர்களான பாஜகவின் அமித் ஷா, சமாஜவாதி கட்சியின் ஆஸம் கான், காங்கிரஸின் வேணி பிரசாத் வர்மா மற்றும் கர்நாடக முதல்வர் சித்தாராமய்யா ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்நிலையில், தில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் விடுத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

    மக்களிடம் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவோர் மீது எவ்வித தலையீட்டுக்கும் இடமளிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி, சுதந்திரம் மற்றும் நேர்மையான தேர்தல் நடவடிக்கைகளுக்கு சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் குந்தகம் விளைவித்திருக்கிறது. இத்தகைய விஷயத்தில் மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

    நடத்தை விதிகளை பின்பற்றி அனைத்து பிரசாரங்களையும் பாகுபாடின்றி கண்காணிப்பது மற்றும் விடியோவில் பதிவு செய்வது ஆகியவற்றில் தேர்தல் அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும். பிரசாரத்தில் ஈடுபடுவோர் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசினால் அவர்கள் யாராக இருந்தாலும் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரும் ஓரே நேரத்தில் பூர்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதனை ஊடகங்கள் வழியாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். விதிமீறல்கள் குறித்து ஊடகங்கள் மூலம் தகவல் தெரிந்தாலும் அதற்கு உரிய மதிப்பளிக்க வேண்டும். பிரசார ஒருங்கிணைப்பாளர்களிடம் பிரசாரம் குறித்த முழுமையான பேச்சுக்களை 2 குறுந்தகடுகள் மூலம் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai