Enable Javscript for better performance
\\\"என்ஜிஓ\\\' பணிகளை தொடருங்கள்: கேஜரிவாலுக்கு ஹர்ஷ் வர்தன் அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    "என்ஜிஓ' பணிகளை தொடருங்கள்: கேஜரிவாலுக்கு ஹர்ஷ் வர்தன் அறிவுரை

    By புது தில்லி,  |   Published on : 17th April 2014 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தொண்டு நிறுவன ("என்ஜிஓ') பணிகளைத் தொடருங்கள் என்று தில்லி பாஜக தலைவர் ஹர்ஷ் வர்தன் அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஆம்ஆத்மி கட்சி தலைமையிலான அரசு தில்லியில் 49 நாள்கள்தான் ஆட்சியில் இருந்தது. ஆனால், இப்போது அது குறித்து ஊடகங்கள் மூலம் அந்த அரசில் முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால் வருத்தம் தெரிவித்து வருகிறார். சவால்களைக் கண்டு அஞ்சி ஓடுவது அரசியல் அல்ல. மூத்த சகோதரனாக கேஜரிவாலுக்கு கூறுவது "வீட்டுக்குச் சென்று, என்ஜிஓ பணிகளைத் தொடருங்கள். ஆர்ப்பாட்டங்கள், சத்தியாகிரக போராட்டங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் என்ஜிஓ மூலம் நாட்டு மக்களுக்கு கூடுதலாக சேவை செய்ய முடியும்.

    தில்லியில் நிலவும் குடிநீர், மின்சாரம் ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல், ஆம்ஆத்மி அரசு திடீரென ராஜிநாமா செய்தது. மின் கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடித்து வரும் மின் விநியோக தனியார் நிறுவனங்கள் மீது ஆம்ஆத்மி ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு மாறாக மின் கட்டணம் 50 சதவீதம் குறைக்கப்பட்டதற்கு அந்த நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கப்பட்டது.  இடையிலேயே பதவி விலகியதால் கேஜரிவால் மீது தில்லிவாசிகள் அதிருப்தியில் உள்ளனர். இதனுடைய வெளிப்பாடே மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது அவர் தாக்கப்பட்டார். இது போன்ற தாக்குதலுக்குப் பதிலாக அக் கட்சிக்கு தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். நாடு முழுவதும் போட்டியிடும் ஆம்ஆத்மி வேட்பாளர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

    பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து வாராணசி தொகுதியில் போட்டியிடும் கேஜரிவால் தோல்வியடைவது உறுதி. இது போல நாடு முழுவதும் விளையாட்டு போக்கில் வேட்பாளர்களை அக் கட்சி நிறுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலில் இது போன்ற குழப்பமான சூழலை ஏற்படுத்தியிருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி லாபமடைந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai