Enable Javscript for better performance
கட்டாயமாகிறது திருமணப் பதிவு!- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் திருமணம் செய்து கொள்ளும் அனைவரும் திருமணப் பதிவை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கை தில்லி அரசின் அரசிதழில் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

    திருமணம் முடிந்து 60 நாள்களுக்குள் திருமணப் பதிவை மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவைப் பின்பற்றாதவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தில்லி அரசின் வருவாய் செயலர் தரம்பால் கூறியதாவது:  தில்லியில் திருமணம் செய்துகொள்ளும் ஆண்-பெண் தங்களது திருமணப் பதிவை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுக்கு தில்லிச துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து, இத் திருமணப் பதிவு கட்டாய முடிவை அமல்படுத்தும் வகையில் அரசிதழில் அடுத்த வாரத்திற்குள் அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது.

    "தில்லி (கட்டாய திருமணப் பதிவு) உத்தரவு, 2014'-இன்படி, இனம், மதம், சாதிக்கு அப்பாற்பட்டு தில்லியில் முடிக்கப்படும் அனைத்துத் திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் திருமணப் பதிவை சிரமமின்றி மேற்கொள்ளவும், வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் தில்லி  வருவாய் துறை விரைவில் தனியாக ஒரு பிரிவை தொடங்க உள்ளது.  மேலும், தட்கல் முறையிலும் திருமணப் பதிவை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும். முன்னுரிமை அடிப்படையில் பதிவு மேற்கொள்ளப்படும். இதற்கான கட்டணமாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படும். மற்றபடி சாதாரணமாக திருமணப் பதிவு மேற்கொள்ள கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும். திருமணத்தின் போது ஆணின் வயது 21 ஆகவும், பெண்ணின் வயது குறைந்தபட்சம் 18 வயதாகவும் இருக்க வேண்டும். அவர்களில் குறைந்தபட்சம் ஒருவர் இந்தியக் குடிமகனாகவும் இருத்தல் வேண்டும்.

    திருமணப் பதிவைக் கட்டாயம் மேற்கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 2006-ஆம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்திருந்தது. தில்லி அரசு 2012-ஆம் ஆண்டில் தில்லி திருமணப் பதிவு மசோதா வரைவைத் தயாரித்திருந்தது. இந்த மசோதா தில்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக பேரவையின் தேர்வுக் குழுவுக்குப் பரிசீலனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் நான்காவது தில்லி பேரவையின் காலம் முடிவடைந்த நிலையில் மசோதாவும் காலாவதி ஆகிவிட்டது.

     இந் நிலையில், திருமணப் பதிவை கட்டாயமாக்குவதை செயல்படுத்துமாறு ஒரு மாதத்திற்கு முன்பு உச்ச நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டிருந்தது. இதனால்தான் இந்த விவகாரத்தில் தற்போது நிர்வாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசிதழில் இதற்கான அறிவிக்கை வெளியாகும் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும்.  எனினும், ஏற்கெனவே உள்ள சட்டத்தின் கீழ் திருமணப் பதிவை செய்தவர்கள் புதிதாகப் பதிவு ஏதும் செய்ய வேண்டியதில்லை.

      ஹிந்து திருமணச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம் அல்லது பிற சட்டங்களின் கீழ் திருமணப் பதிவுக்காக ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், தற்போதைய புதிய உத்தரவின் கீழ் மேற்கொள்ளப்படும் திருமணப் பதிவுப் பணியையும் மேற்கொள்வார்கள்.

     தற்போதைய உத்தரவின்படி, தங்களது திருமணத்தைப் பதிவு செய்யும் தம்பதிகள் தங்களது பகுதியில் உள்ள திருமண அலுவலரிடம் கூட்டாகச் சேர்ந்து "படிவம்-ஏ'-ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அத்துடன் வயது, குடியுரிமை, மணமகள் மற்றும் மணமகனின் அடையாளச் சான்று, திருமணம் நிகழ்ந்த இடம், முகவரி குறித்து விவரங்கள் அடங்கிய ஆவணங்களையும் அளிக்க வேண்டும் என்று தரம்பால் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai