Enable Javscript for better performance
காலணியில் ஹெராயின் கடத்த முயற்சி: நைஜீரிய இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காலணியில் ஹெராயின் கடத்த முயற்சி: நைஜீரிய இளைஞர் கைது

    By புது தில்லி,  |   Published on : 17th April 2014 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெண்கள் அணியும் காலணிக்குள் மறைத்து வைத்து ஹெராயின் போதைப்பொருளை அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற நைஜீரிய இளைஞரை தில்லி போதைப் பொருள் குற்றவியல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

    இதுகுறித்து தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் காவல் கூடுதல் ஆணையர் (குற்றப்பிரிவு) ரவீந்திர யாதவ் கூறியதாவது: வெளிநாட்டுக்கு விமான கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ஏப்ரல் 14-ஆம் தேதி தில்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,  சோதனை மேற்கொண்டதில், ஜனக்புரி கிழக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நைஜீரியா வாரி மாகாணத்தைச் சேர்ந்த ஓடியமேனன் கென்னத் ஓசியாமோ (23) என்பவர் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு பார்சலுடன் நின்றிருந்தார்.

    அவரிடம் நடத்திய சோதனையில் அவர் வைத்திருந்த பார்சலில் பெண்கள் அணியும் காலணிக்குள் 330 கிராம் கொண்ட ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு சுமார் ரூ.70 லட்சம் ஆகும்.  இதையடுத்து, அவரைக் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 2009-ஆம் ஆண்டு அவர் தில்லி வந்துள்ளார். அப்போது முத்ல துணி மற்றும் பெண்கள் அணியும் காலணிகளை தயாரித்து அவரது சொந்த நாடான நைஜீரியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்ததுள்ளார்.

    இந் நிலையில், அவரது விசா காலம் முடிவடைந்ததால், தில்லியிலிருந்து மும்பைக்கு மாறினார். அப்போது, மற்றொரு நைஜீரியரான இக்கி என்பவருடன் கென்னத்துக்கு நட்பு ஏற்பட்டது.

    போதைப்பொருள் கடத்தினால் ஆடம்பரமாக வாழலாம் என்று கென்னதுக்கு இக்கி ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். அதையடுத்து, கென்னத் மும்பையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் போதைப் பொருள் கடத்தி விற்பனை செய்து வந்தார்.

    அதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக வருமானம் கிடைத்ததால், துணி வியாபாரத்தை விட்டு போதைப் பொருள் கடத்தலில் முழுநேரமாக கென்னத் ஈடுபடத் தொடங்கினார்.

    இந் நிலையில், ஏப்ரல் 5-ஆம் தேதி கென்னத் தில்லி வந்து, இக்கியை சந்தித்துப் பேசினார். அப்போது, பெண்கள் அணியும் காலணியில் மறைத்து, அமெரிக்காவுக்கு ஹெராயின் போதைப் பொருளை கடத்த வேண்டும் என்று திட்டம் வகுத்தனர். எனினும், அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்பும் முன்பு கென்னத்  கையும் களவுமாக பிடிபட்டார். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதேபோல் வெளிநாடுகளுக்கு போதைப் பொருள்களை நூதன முறைகளில் கடத்திச் செல்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தோம். அதன்படி சமீபத்தில் விளையாட்டு உபகரணத்தில் 400 கிராம் போதைப்பொருளை கடத்தியது, ஷூவுக்குள் மறைத்து 200 கிராம் "கோகைன்' போதை பொருள் கடத்தியது, சைக்கிள் சீட்டுக்கு அடியில் வைத்து 1 கிலோ ஹெராயின்  கடத்தியது உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்துள்ளோம் என்றார் ரவீந்திர யாதவ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai