Enable Javscript for better performance
பாஜக பாச வலையில் சிக்குவாரா கிரண் பேடி!எம்.சடகோபன்- Dinamani

சுடச்சுட

  

  பாஜக பாச வலையில் சிக்குவாரா கிரண் பேடி!எம்.சடகோபன்

  By புது தில்லி,  |   Published on : 17th April 2014 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், சமூக ஆர்வலருமான கிரண் பேடியை கட்சியில் இணைத்து தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் பதவி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு தொடர்ந்து பாஜக முயன்று வருகிறது. இந் நிலையில், பாஜகவின்  பாச வலையில் அவர் சிக்குவாரா? என்பதே தலைநகர் அரசியல் பார்வையாளர்களின் கேள்வியாக உள்ளது.

  கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மூத்த தலைவர் ஹர்ஷ் வர்தன் முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜகாவால் 31 தொகுதிகளில்தான் வெற்றி பெற முடிந்தது. புதிதாக உருவெடுத்த ஆம்ஆத்மி கட்சி யாரும் எதிர்பாராத நிலையில் 28 இடங்களைக் கைப்பற்றி அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்த அக் கட்சிக்கு தில்லிவாசிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.

  இதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை நீடித்தாலும், காங்கிரஸ் அளித்த ஆதரவுடன் கேஜரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. ஆனால், 49 நாள்களே ஆட்சியில் இருந்தது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதால் ஆட்சியிலிருந்து விலகியது. மேலும், மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் ஆம்ஆத்மி வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளார் அரவிந்த் கேஜரிவால்.

  இந் நிலையில், அரவிந்த் கேஜரிவாலை சமாளிக்கும் வகையிலும், தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடனும்  ஊழல் ஒழிப்பு, நேர்மையான அரசியல் உள்ளிட்டவற்றுக்குக் குரல் கொடுத்து வரும் முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண் பேடியை களத்தில் இறக்க பாஜக முயன்று வருவதாக தலைநகர் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

  கடந்த தேர்தலில் முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹர்ஷ் வர்தன், இப்போது சாந்தினி செüக் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் கபில் சிபலை எதிர்த்துப் போட்டியிடுவது இதை மெயம்ப்பிக்கும் வகையில் உள்ளது. கட்சி வேண்டுகோளின்படியே அவர் களத்தில் உள்ளார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

  ஏற்கெனவே முன்பு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஒரு பேட்டியின் போது முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி ஆகிய இருவரும் பாஜகவில் சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இதில் வி.கே. சிங் பாஜகவில் இணைந்து காஜியாபாத் மக்களவைத் தொகுதியில் களம் காண்கிறார். இந் நிலையில் கிரண் பேடியும் பாஜக வலையில் சிக்குவாரா என்பதே அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தில்லியில் திடீரென்று விஸ்வரூபம் எடுத்து ஆட்சியைப் பிடித்ததும் முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால்,பெண் பாலியல் பலாத்காரம் சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி உண்ணாவிரதம் இருந்து அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார்.

  இது குறித்து அப்போது கிரண் பேடி கருத்துத் தெரிவிக்கையில் "ஆம்ஆத்மி கட்சி வீதியில் இறங்கிப் போராடுவதைப் பார்க்கும் போது அக் கட்சிக்காக வாக்களித்தவர்களை நினைத்து வருந்துகிறேன். தில்லி வாக்காளர்கள் கவலை கொள்ளும் வகையில் முதல்வர் கேஜரிவாலின் செயல்பாடு அமைந்துள்ளது. முதல்வரான பிறகும் அவரால் வீதிக்கு வந்து போராடித்தான் கோரிக்கையை வலியுறுத்த முடிகிறது. அவருடையை பாதை மிகவும் ஆபத்தானது' என்றார்.

  சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து வந்த கிரண் பேடி, அந்த அணியிலிருந்து விலகி அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

  அதன் பிறகு மற்றொரு பேட்டியில், மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைய வேண்டும் என்று கிரண் பேடி கூறினார். அப்போது அவர் கூறுகையில், "மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளைத் தவிர்த்து பிற கட்சிகளால் நிலையான அரசை வழங்க முடியாது. பாஜக பிரதமர் பதவி வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி மூன்று முறை தொடர்ந்து முதல்வராகி அந்த மாநிலத்தை முன்னேற்றியுள்ளார். நாட்டு நலனுக்கு அவரால்தான் நன்மை செய்ய முடியும். இதை நாட்டு நலனைக் கருதித்தான் கூறுகிறேன். அவருக்குத்தான் பிரதமர் பதவி கிடைக்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத மத்திய அரசுதான் என் விருப்பம். ஆம்ஆத்மிக்கு வாக்களிப்பது காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது போன்றதாகும். எப்படி இருந்தாலும் அக் கட்சி நாட்டை ஆளப் போவதில்லை. நமது முதல் கடமை காங்கிரஸ் கட்சியிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதுதான்' என்றார் கிரண் பேடி.

  இது குறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "மக்களவைத் தெர்தல் முடிந்தவுடன் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. கடந்த பேரவைத் தேர்தலிலேயே கிரண் பேடியை பாஜக சார்பில் முதல்வர் பதவி வேட்பாளராக களம் இறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. இந் நிலையில், இப்போது அவரை கட்சியில் இணைத்து மீண்டும் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக களம் இறக்க மூத்த தலைவர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளனர்' என்றார்.

  ஏற்கெனவே தில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகியதும், மக்களவைத் தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிட உள்ளதாக அரவிந்த் கேஜரிவால் கூறியதுமே புதுதில்லி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்படி கிரண் பேடியை பாஜக கேட்டுக் கொண்டது. ஆனால், அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார். நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்து, விருப்ப ஓய்வுக்கு பிறகு  சமூக நலப் பணிகளில் ஆர்வம் கொண்டுள்ள கிரண் பேடி, பாஜகவின் பாச வலையில் சிக்குவாரா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai