Enable Javscript for better performance
மேம்பாலங்கள் அமைக்க நெறிமுறைகள் மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    மேம்பாலங்கள் அமைக்க நெறிமுறைகள் மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    By புது தில்லி,  |   Published on : 17th April 2014 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களைச் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதற்கான நெறிமுறைகளை அமைக்க மத்திய, தில்லி பிரதேச அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், இது தொடர்பாக மே 21-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கக் கோரி மத்திய ரயில்வே துறை, தில்லி அரசு, வடக்கு தில்லி மாநகராட்சி, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி, ஜல் போர்டு, போக்குவரத்துக் காவல் துறை ஆகியவற்றுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

     தில்லி ராணி ஜான்சி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை விரைந்து முடிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் ஆர்பித் பார்கவா தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரதீப் நந்த்ராஜோக், ஜெயந்த் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.

     அந்த மனுவில் கூறியிருப்பதாவது: "ராணி ஜான்சி சாலையில் மேம்பாலம் அமைப்பதற்காக கடந்த 2009-ஆம் ஆண்டு பொது மக்களின் வரிப் பணத்தில் இருந்து ரூ.177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், மேம்பாலம் இதுவரை கட்டி முடிக்கப்படவில்லை. இத் திட்டத்துக்கு இதுவரை ரூ.260 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், மேம்பாலம் கட்டுவதற்காக இதுவரை 54 சதவீத நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு வரை 30 சதவீதப் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. இப்போது இத் திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மேம்பாலம் கட்டுவதற்காக அங்கிருந்த கடைகளை அவசர அவசரமாக அகற்றிய அதிகாரிகள், இப்போது காலதாமதமாவதற்கான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை.

     இத் திட்டத்துக்கு முழுமையாக நிலம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சகமும், ஒதுக்கப்பட்ட நிலத்தில் மேம்பாலப் பணிகளை தொடங்கவில்லை என்று முனிசிபல் அதிகாரிகளும் புகார் அளித்துள்ளனர்.

     இத் திட்டம் நிறைவேறும் வரை, இப்போது ராணி ஜான்சி சாலையில் இருந்து திஸ் ஹஸாரி சாலை வரை உள்ள பகுதியை நல்ல நிலையில் பராமரிக்க வேண்டும். மேலும், மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், ஜல் போர்டு மேற்கொண்டு வரும் குழாய் பதிப்புப் பணிகளை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும். எனவே, மேம்பாலம் கட்டுவதற்கான தாமதத்தை அறிய உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று மனுவில் ஆர்பித் பார்கவா குறிப்பிட்டிருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai