Enable Javscript for better performance
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ரூ.6 லட்சம் கொள்ளை?- Dinamani

சுடச்சுட

    

    வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் ரூ.6 லட்சம் கொள்ளை?

    By புது தில்லி,  |   Published on : 17th April 2014 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புறநகர் தில்லியில் வீட்டில் தனது குழந்தைகளுடன் தனியாக இருந்த பெண்ணிடம் ரூ.6 லட்சத்தை மர்ம நபர்கள் இருவர் கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படும் புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து தில்லி போலீஸார் கூறியதாவது:

    புறநகர் தில்லி, ரோஹிணி செக்டார் 17-இல் வசிப்பவர் பிரவீண் கோயல். இவர் நரேலா தொழிற்பேட்டை பகுதியில் பிளாஸ்டிக் பொருள் தயாரிப்புத் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    கடந்த திங்கள்கிழமை வழக்கம்போல் அவர் தனது அலுவலகத்திற்குச் சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி ரதி கோயல், அவரது இரு குழந்தைகள் மட்டும் இருந்தனர். மாலையில் இரு மர்ம நபர்கள் காலி குடிநீர் பாட்டிலுடன் வந்து ரதியிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டனர்.

    இதையடுத்து, தண்ணீர் கொண்டு வர ரதி உள்ளே சென்ற போது, இருவரும் அவரைப் பின்தொடர்ந்து சென்று நாட்டுத் துப்பாக்கியால் மிரட்டினர்.

    பின்னர், வீட்டில் இருந்து ரூ.6 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாகவும், இச் சம்பவம் நிகழ்ந்த போது வீட்டின் வேறு ஓர் அறையில் குழந்தைகள் இருவரும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக தனது கணவருக்கு ரதி கோயல் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸில் பிரவீண் கோயல் புகார் அளித்தார். போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சில தினங்களுக்கு முன்பு பிரவீண் கோயல் தனது வீட்டில் ரூ.7 லட்சம் பணத்தை வெளியில் இருந்து கொண்டு வந்து வைத்துள்ளார். அதில் ஒரு லட்சம் ரூபாயை வீட்டுச் செலவினத்திற்கும், ரூ.6 லட்சத்தைத் தொழில் பரிவர்த்தனைக்கும் வைத்திருந்தார்.

    இந் நிலையில், கொள்ளையர்கள் ரூ.6 லட்சத்தை மட்டுமே கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனால், கொள்ளையர்கள் குறித்து அடையாளம் கூறுமாறு ரதி கோயலிடம் கேட்ட போது கொள்ளையர்கள் இருவரும் முகத்தை துணியால் மூடி இருந்ததாகக் கூறினார். அப்படியெனில், இருவரையும் அவர் உள்ளே வர எப்படி அனுமதித்தார் என்ற சந்தேகம் எழுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai