Enable Javscript for better performance
கடற்படையின் புதிய தலைமை தளபதியாக தோவான் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கடற்படையின் புதிய தலைமை தளபதியாக தோவான் பொறுப்பேற்பு

    By புது தில்லி  |   Published on : 18th April 2014 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக ராபின் கே தோவான் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். 59 வயதாகும் தோவான், இந்திய கடற்படையின் 22ஆவது தலைமைத் தளபதியாவார். நேவிகேஷன் மற்றும் வழிகாட்டுதல் துறையில் அவர் நிபுணராவார்.

    இந்தியக் கடற்படையில் உள்ள கப்பல்கள், நீர்மூழ்கிகள் ஆகியவற்றில் கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து விபத்துகள் நேரிட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, அந்தச் சம்பவங்களுக்கு தார்மிகப் பொறுப்பேற்று கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி கடற்படை தலைமைத் தளபதி பதவியை டி.கே. ஜோஷி ராஜிநாமா செய்தார்.

    இதனைத் தொடர்ந்து, துணைத் தளபதியாக இருந்த ராபின் கே தோவான், தலைமைத் தளபதி பதவியில் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.

    திட்டமிட்டபடி டி.கே. ஜோஷி 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றிருந்தால், அவரைத் தொடர்ந்து புதிய தலைமைத் தளபதியாக தெற்கு பிராந்திய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சதீஷ் சோனி பொறுப்பேற்றிருப்பார். ஆனால் டி.கே. ஜோஷி தனது பதவியை முன்கூட்டியே ராஜிநாமா செய்து விட்டதால், அப்பதவிக்கு தற்போதைய பணி மூப்பின் அடிப்படையில் மேற்கு பிராந்திய கடற்படைத் தளபதி சேகர் சின்ஹா, ராபின் கே தோவான், கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதி அனில் சோப்ரா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    அண்மையில் இந்தியக் கடற்படையில் நேரிட்ட 14 விபத்துகளில், சேகர் சின்ஹாவின் அதிகார வரம்புக்கு உள்பட்ட மேற்கு பிராந்தியத்திலேயே அதிக விபத்துகள் நேரிட்டுள்ளன.

    குறிப்பாக 2 நீர்மூழ்கிகளில் நேரிட்ட விபத்துகளில் கடற்படை வீரர்கள் 20 பேர் பலியாகினர்.

    இதனால் கடற்படை தலைமைத் தளபதி பதவிக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. அவருக்கு அடுத்து பணிமூப்பு அடிப்படையில் தோவானே, கடற்படை தலைமைத் தளபதிக்கு தகுதியுடையவர் என பாதுகாப்பு அமைச்சகம் கருதியது. இதனையடுத்து கடற்படை தலைமைத் தளபதி பதவிக்கு அவரது பெயரை பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரைத்தது.

    அந்தப் பரிந்துரையை ஏற்று, தோவானை கடற்படை தலைமைத் தளபதியாக நியமிப்பதற்கு, பணி நியமனத்துக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து புதிய தலைமைத் தளபதியாக ராபின் கே தோவான் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

    நீட்டிப்பு: ராபின் கே தோவான், வரும் மே மாதம் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதாக இருந்தது.

    தற்போது கடற்படைக்கு புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பதால், அவரது பணிக்காலம் 2016ஆம் ஆண்டு மே மாதம் வரை, மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai