Enable Javscript for better performance
குழந்தைகள் பூங்காக்கள்: நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள் பூங்காக்கள்: நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

    By புது தில்லி,  |   Published on : 18th April 2014 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் உள்ள குழந்தைகளுக்கான பூங்காக்கள் போதிய பராமரிப்பின்றி இருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவற்றின் நிலவர அறிக்கையை இரு வாரங்களில் தாக்கல் செய்யுமாறு மாநகராட்சிகள், பொதுப் பணித் துறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு தில்லி உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

    உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) பி.டி. அகமதுவுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதியிட்டு கடிதம் எழுதியிருந்தார்.

    கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: "அண்மையில் இந்தியா கேட் அருகே உள்ள குழந்தைகள் பூங்காவுக்குச் சென்றிருந்தேன். சில தினங்களுக்கு பிறகு சரோஜினி நகர் அருகே உள்ள "ஏரி பூங்காவுக்கும் (லேக் பார்க்) சென்றிருந்தேன். அப் பூங்காவில் குழந்தைகள் விளையாடக் கூடிய ஊஞ்சல், சறுக்கு சாதனங்கள் உள்ளிட்டவை போதுமான பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் இருந்தன. அங்கிருந்த நீரூற்றும் பராமரிக்கப்படவில்லை. லேக் பார்க்கில் இருந்த சறுக்கு சாதனங்களில் ஓட்டைகள் இருந்தன.

    குழந்தைகள் அவற்றில் விளையாடும்போது குழந்தைகளுக்கு காயம் ஏற்படும் நிலை உள்ளது. இது மனவேதனையை ஏற்படுத்துகிறது. மேலும், இது குழந்தைகளின் மனித உரிமை மீறலை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. தில்லியில் உள்ள அனைத்து குழந்தைகளின் பூங்காக்களும் நிலைமையை மேம்படுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்' என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

    இக் கடிதத்தை பொதுநல மனுவாக ஏற்று உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) பி.டி. அகமது, நீதிபதி எஸ். மிருதுள் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

    அப்போது, "தில்லியில் உள்ள அனைத்து குழந்தைகள் பூங்காக்களின் எண்ணிக்கை, அப் பூங்காக்களை மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள செயல் திட்டம், பராமரிப்பு, பழுதுபார்ப்பு வசதிகள் ஆகியவை தொடர்பான விவரங்கள் அடங்கிய நிலவர அறிக்கையை தில்லியின் மூன்று மாநகராட்சிகள், தில்லி வளர்ச்சி ஆணையம் (டிடிஏ), பொதுப் பணித் துறை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை இரு வாரங்களுக்குள்

    உரிய புகைப்படங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும். பூங்காக்களில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் அதைச் சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சரோஜினி நகர் மற்றும் இந்தியா கேட் பகுதி பூங்காக்களைப் பழுதுபார்த்து, தரம் உயர்த்தும் நடவடிக்கைகளை புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) உடனடியாக மேற்கொள்ள வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பான அடுத்த விசாரணையை மே 7-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    நீதிமன்ற நண்பர்: மேலும், பூங்காக்களின் தரத்தை மேம்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகளைக் கண்காணிப்பதற்காகவும் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவிடும் வகையிலும் நீதிமன்ற நண்பராக (அமீகஸ் கியூரியே) மூத்த வழக்குரைஞர் நிதேஷ் குப்தாவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு நியமித்தது. சில பூங்காக்களுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமை ஆய்வு செய்து நீதிமன்றத்திடம் தெரிவிக்குமாறும் குப்தா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai