Enable Javscript for better performance
துணைநிலை ஆளுநருக்கு முடிவெடுக்கும் அதிகாரம்- Dinamani

சுடச்சுட

    

    துணைநிலை ஆளுநருக்கு முடிவெடுக்கும் அதிகாரம்

    By புது தில்லி,  |   Published on : 18th April 2014 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டு ஓராண்டு காலம் முடிவடையும்வரை காத்திருக்காமல் தில்லியில் புதிதாக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தலாமா என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதேச துணைநிலை ஆளுநருக்கு உண்டு' என்று சட்டபூர்வ நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெளிவுபடுத்தியது.

    தில்லி சட்டப்பேரவையை முடக்கி வைத்துள்ள துணை நிலை ஆளுநரின் முடிவை எதிர்த்து ஆம்ஆத்மி கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம். லோதா, குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

    "தில்லி சட்டப்பேரவையை கலைக்க துணைநிலை ஆளுநர் ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டியதில்லை. தில்லி தேசிய தலைநர் பிராந்திய சட்டத்தில் உள்ள தகுந்த ஷரத்தைக் கருத்தில் கொண்டு புதிதாக தேர்தலை நடத்த உத்தரவிடும் அதிகாரம் உண்டு. நீதிமன்றத்தின் சட்ட ரீதியிலான இக் கருத்தை ஓர் உத்தரவாக ஊகிக்க கூடாது. உண்மை மற்றும் சந்தர்ப்ப சூழலைக் கருத்தில் கொண்டு தேர்தலை நடத்த உத்தரவிடும் சுதந்திரம் துணைநிலை ஆளுநருக்கு உள்ளது. தில்லியில் புதிதாக தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சட்டப் பேரவையை கலைப்பதற்கு குடியரசுத் தலைவருக்கும் சட்டரீதியில் தடையில்லை' என்று தெரிவித்த நீதிபதி அமர்வு, இந்த விவகாரம் மீதான விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

    பின்னணி: தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் அளித்த பரிந்துரையின் பேரில் தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும், சட்டப்பேரவையை முடக்கி வைக்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, தில்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தும் பிரகடனம் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியானது.

    இதையடுத்து, சட்டப்பேரவையை முடக்கிய ஆளுநரின் முடிவு சட்ட விரோதமானது என்று அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஆம்ஆத்மி கட்சி வழக்குத் தொடர்ந்தது.

    "தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் பிப்ரவரி 14-ஆம் தேதி கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், தில்லி சட்டப்பேரவையைக் கலைக்கலாம் என்று துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அப் பரிந்துரையை நிராகரித்துவிட்டு சட்டப் பேரவையைத் துணைநிலை ஆளுநர் முடக்கி வைக்க உத்தரவிட்டுள்ளார். சட்டப் பேரவையை முடக்கி வைத்த முடிவு ஒரு தலைப்பட்சமானது, சட்ட விரோதமானது' என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai