Enable Javscript for better performance
மோடி மீதான உமா பாரதி விமர்சனம்: விசிடி வெளியிட்டது காங்கிரஸ்- Dinamani

சுடச்சுட

    

    மோடி மீதான உமா பாரதி விமர்சனம்: விசிடி வெளியிட்டது காங்கிரஸ்

    By புது தில்லி,  |   Published on : 18th April 2014 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், நரேந்திர மோடியை "அழிவு நாயகன்' என அக்கட்சியின் மூத்த தலைவர் உமா பாரதி விமர்சித்தது தொடர்பான விடியோ சிடியை காங்கிரஸ் கட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பாஜகவில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உமா பாரதி நீக்கப்பட்டதால், பாரதிய ஜனசக்தி என்ற புதிய கட்சியை தொடங்கினார். அந்த காலகட்டத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை உமா பாரதி கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். பின்னர் தனது கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் கடந்த 2011-இல் பாஜகவில் இணைந்த உமா பாரதி, தற்போது அக்கட்சியின் சார்பில் மத்தியப் பிரதேச மாநிலம் ஜான்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திர மோடி களமிறங்கியுள்ள நிலையில் அவரைப் பற்றி உமா பாரதி முன்பு பேசிய சர்ச்சைக்குரிய உரை அடங்கிய விடியோ சிடியை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தில்லியில் வியாழக்கிழமை வெளியிட்டதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள அந்த சிடியில்,"எனக்கு அவரை (நரேந்திர மோடியை) கடந்த 1973 ஆம் ஆண்டிலிருந்து தெரியும். அவர் வளர்ச்சி நாயகன் அல்ல; அழிவு நாயகன். அவரது ஆட்சிக்காலத்தில் குஜராத்தில் உற்பத்தி அதிகரித்ததாகவும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்த ஏழை மக்களை வறுமைக்கோட்டுக்கு மேல் உயர்த்தியதாகக் கூறுவதெல்லாம் கட்டுக்கதை.

    குஜராத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அச்சத்தில் ஹிந்துக்கள் உள்ளனர். அந்த மாநிலம் முழுவதும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது' என உமா பாரதி பேசியிருப்பது இடம்பெற்றுள்ளது. அதில், நரேந்திர மோடியைப் பற்றி மேலும் பல குற்றச்சாட்டுகளை உமா பாரதி கூறியுள்ளார்.

    இந்த விசிடி குறித்து செய்தியாளர்களிடம் அபிஷேக் சிங்வி கூறுகையில், "இந்த உரை பதிவு செய்யப்பட்டபோது பாஜகவில் உமா பாரதி இல்லை. இருப்பினும் தேர்தல் அல்லாத சமயத்தில் இதுபோன்று ஒரு மூத்த தலைவர் கூறும் குற்றச்சாட்டுகளில் கொஞ்சமாவது உண்மை இருக்க வாய்ப்பு இருக்கிறது. அவை பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் பற்றியது என்பதை கவனிக்க வேண்டும்'என்றார். இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி, "இதுபோன்ற பழைய சிடியை காங்கிரஸ் வெளியிட்டிருப்பது அதன் நம்பிக்கை இழந்த போக்கையும், சிந்தனை வறட்சியையும் காட்டுகிறது' என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், "இதுபோல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்களின் உரைகள் அடங்கிய சிடிகளை பாஜகவும் வெளியிட முடியும்' என்று கூறினார்.

    இதனிடையே, காங்கிரஸ் வெளியிட்டுள்ள மூன்றாண்டுக்கு முந்தைய வி.சி.டி. குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் உமா பாரதி புகார் கொடுத்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai