Enable Javscript for better performance
வழிப்பறி சம்பவங்களில் இளம் பெண்கள்!- Dinamani

சுடச்சுட

    

     தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளில் நிகழும் வழிப்பறி சம்பவங்களில் இளைஞர்கள் மட்டுமின்றி இளம் பெண்களும் சிலர் ஈடுபட்டுள்ளது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    தில்லி, தேசிய தலைநகர் வலயம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்கள் சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களும் அதிகரித்துள்ளன.

    இது போன்ற சம்பவங்களால் அதிகம் பாதிக்கப்படுவோர் பெண்களாக உள்ளனர். நடைபாதைகளில் செல்லும் பெண்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரையிலான காலத்தில் மட்டும் தில்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் சுமார் 2,044 வழிப்பறி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதிகரித்துள்ள வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களை அச்சமடையச் செய்துவருகிறது.

    தில்லி ஆர்.கே. புரம் பகுதியில் நிகழ்ந்த ஒரு வழிப்பறி சம்பவம் தொடர்பான விடியோகாட்சிப் பதிவில் பெண் ஒருவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்துள்ள ஒருவர் நகையைப் பறிப்பது இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் 18 முதல் 25 வயதுள்ள நபர்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து தில்லி காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுபோன்ற வழிப்பறி சம்பவங்களைத் தடுக்க தேவையன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.

    இது தொடர்பான விசாரணையின்போது இந்த வழிப்பறி சம்பவங்களில் இளம்பெண்கள் தங்களது ஆண் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று வழிப்பறியில் ஈடுபடுவதும் தெரியவருகிறது. அண்மையில் 28 வயது பெண் ஒருவர், அவரது ஆண் நண்பருடன் பிடிபட்டார். விசாரணையில், இருவருக்கும் தில்லியில் நிகழ்ந்த 12 வழிப்பறி சம்பவங்களில் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது' என்றார்.

    வழிப்பறி சம்பவங்களில் பெண்கள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம். இதனால், மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்தவாறு வழிப்பறியில் ஈடுபடும் நபர்கள் இளம் பெண்களாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. எனவே, இது போன்ற கோணத்திலும் வழிப்பறி வழக்குகளில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai