Enable Javscript for better performance
221 பேருக்கு இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    221 பேருக்கு இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    By புது தில்லி,  |   Published on : 18th April 2014 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டு உயிருடன் உள்ள நபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 1.70 கோடி இழப்பீட்டுத் தொகையை தாமதமின்றி இரு வாரங்களில் வழங்க வேண்டும் என்று தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பஸ்ஸில் துணை மருத்துவ மாணவி ஒரு கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தில்லி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    இதையடுத்து, தலைநகரில் பாலியல் பலாத்காரம் போன்ற பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டு உயிருடன் இருப்போருக்கு இழப்பீடு வழங்குதல், மத்திய தடய அறிவியல் ஆய்வக வசதிகளை அமைத்தல், காவல் துறையில் கூடுதல் பெண் போலீஸாரை நியமித்தல் உள்பட தில்லியில் ஒட்டுமொத்தப் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளை நீதிமன்றம் கண்காணித்து உத்தரவிட்டுவருகிறது.

    இந் நிலையில், இது தொடர்பான விசாரணை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) பி.டி. அகமது, நீதிபதி எஸ். மிருதுள் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதிகள், பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டு உயிர் வாழும் நபர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் நீதிபதிகள் அளித்த உத்தரவு:

    பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டு உயிருடன் உள்ள 221 பேருக்கு அதற்கான இழப்பீட்டுத் தொகையை தில்லி பிரதேச அரசு இரு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். இந்த விவகாரத்தை தில்லி சட்டப் பணிகள் ஆணையம் (டிஎல்எஸ்ஏ) உள்ளிட்ட துறையினரால் முடிவு செய்யப்பட வேண்டும்.

    இதற்கான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும் மாநில அரசு, பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதில் தாமதம் செய்துள்ளது. உரிய காலத்தில் இந்த இழப்பீட்டுத் தொகையை வழங்காவிட்டால் நீதிமன்றத்தின் அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதே போன்று, டிஎல்எஸ்ஏவும் இழப்பீட்டை வழங்குவதில் தாமதம் செய்யக் கூடாது.

    தில்லியில் காவலர்கள் பற்றாக்குறை இருப்பதாகப் பொதுமக்கள் உணர்கின்றனர். ஆகவே, காவல் துறையில் உள்ள கூடுதல் பணியிடங்களை நிரப்பவும் பணியிடங்களை உருவாக்கவும் தில்லி காவல் துறை, பிரதேச அரசு, மத்திய அரசு ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தில்லி காவல் துறையில் கூடுதல் பணியிடங்களை உருவாக்குவது தொடர்பாக நிலைமையை மதிப்பிடுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த முன்மொழிவை தில்லி காவல் துறை தாமதம் ஏதுமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அதே போன்று, என்டிஎம்சி கட்டடத்தில் தடய அறிவியல் ஆய்வகத்தை அமைப்பது தொடர்பான விவகாரத்தில் அந்த இடத்தை அரசிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai