Enable Javscript for better performance
ஆட்சி அமைக்க பாஜகவை அழையுங்கள்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவுக்கு அழைப்பு விடுக்கும்படி துணைநிலை ஆளுநரை ஆம்ஆத்மி கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தில்லி சட்டப்பேரவை முடக்கிவைத்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது. 

    இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கு ஆம்ஆத்மி சார்பில் அதன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷண் வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதம்:

    தில்லியில் ஆம்ஆத்மி அரசு கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி ராஜிநாமா செய்தது. அப்போது, தில்லி சட்டப்பேரவையை கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்தவும்  பரிந்துரைக்கப்பட்டது. சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றதைக் கருத்தில் கொண்டு, பேரவையை முடக்கி வைக்க முடிவு செய்யப்பட்டு, அரசு அமைக்க மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டும் எனக் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    இந் நிலையில், தில்லி சட்டப்பேரவை முடக்கி வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக ஆம்ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உள்ள அரசியல் அமைப்பு சிக்கல்களை ஆராய மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது தில்லியில்  அரசு அமைப்பது தொடர்பாக தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்படி பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் மார்ச் 30-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த நோட்டீஸýக்கு இரு கட்சிகளும் பதில் அளித்தன. இதில் உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்காமல் காங்கிரஸ் கட்சி நழுவியது. பாஜகவின் பதிலில் ஆட்சி அமைப்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக விவாதிக்க துணைநிலை ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

    இதையடுத்து, இரு கட்சிகளும் அளித்த பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றம் பரிசீலித்தது. "குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டு ஒராண்டு காலம் முடிவடையும் வரை காத்திருக்காமல் தில்லியில் புதிதாக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தலாமா என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு உண்டு' என்று சட்டபூர்வ நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெளிவுபடுத்தியது. மேலும், தில்லியில் புதிதாகத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சட்டப் பேரவையை கலைப்பதற்கு குடியரசுத் தலைவருக்கும் சட்டரீதியில் தடையில்லை' என்றும் தெரிவித்தது.

    இச் சூழலில் பாஜக தலைவர்களை அழைத்து ஆட்சி அமைப்பது தொடர்பாக அக் கட்சியின் விருப்பத்தைக் கேட்டறிய வேண்டும். தில்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக விருப்பம் தெரிவிக்காதபட்சத்தில், சட்டப்பேரவை முடக்கம் தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்து, தில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அமைய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் ஆம்ஆத்மி கேட்டுக் கொண்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai