Enable Javscript for better performance
தவிப்பில் மின் உற்பத்தி நிலையங்கள்!- Dinamani

சுடச்சுட

    

    தில்லியின் மின்சாரத் தேவையில் பெரும் பங்கு வகித்து வரும் மின் நிலையங்கள் சிலவற்றில் உற்பத்தி தடைபட்டுள்ளது. எரிவாயு பற்றாக்குறையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

     இதனால், கோடைக்காலத்தில் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிப்பது குறித்து மின் விநியோக நிறுவனங்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளன.

     தில்லியில் மின்சாரத் தேவையைக் கருத்தில் கொண்டு மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பிரகதி மின் உற்பத்தி நிலையத்தில் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

     இதே போன்று, பவானாவில் ரூ. 4,500 கோடியில் மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டது. ஆனால், இங்கு எரிவாயு விநியோகம் இல்லாமல் அடிக்கடி உற்பத்தி நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால், தில்லியின் மின் தேவையில் இதன் பங்களிப்பை உரிய வகையில் அளிக்க முடியாத நிலையில் அந் நிறுவனம் உள்ளது.

     பவானா மின் உற்பத்தி நிலையத்தின் முதல் பிரிவு குறைந்தபட்சம் 750 மெகாவாட்  உற்பத்தித் திறன் பெற்றது. ஆனால், மின் நிலையம் தொடங்கப்பட்டதில் இருந்து வெறும் 250 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது 1,500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டாவது பிரிவும் எரிவாயு பற்றாக்குறையால் முடங்கிப் போயுள்ளது.

    இதே போன்று, ரிதாலாவில் உள்ள 108 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட டாடா பவர் மின் உற்பத்தி நிலையமும் போதிய எரிவாயு இருப்பு இன்மையால் நெருக்கடியில் இருந்து வருகிறது.

     இந்த ஆண்டு கோடைக்காலத்தின் தில்லியின் அதிகபட்ச மின் தேவை 6,200 மெகாவாட் மின்சாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில், பவானா, ரிதாலா ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள், போதிய அளவு மின் உற்பத்தி இல்லாமல் முடங்கிப் போயிருப்பது தில்லி மின் விநியோக நிறுவனங்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

     இது குறித்து மின் விநியோக நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், "எரிவாயு பற்றாக்குறை காரணமாக பவானா மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடு அவ்வப்போது தடைபட்டு வருகிறது. இதனால், மின் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது. சீரான எரிவாயு விநியோகம் இருந்தால் மட்டுமே உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும். எனினும், அரசு முழு கொள்திறனுடன் இந்த மின் உற்பத்தி நிலையத்தைச் செயல்படுத்துவதில்லை. இதனால், இங்கிருந்து மின்சாரத்தை எங்களால் தொடர்ந்து பெற இயலாத நிலை உள்ளது.

     மேலும், நாங்கள் விலை குறைவான மின்சாரத்தைப் பெற முயற்சி மேற்கொண்டு

    வருகிறோம். பவானா மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டால் அதன் விலை ஒரு யூனிட் ரூ. 5 முதல் ரூ. 6 ஆக இருக்கும். ஆனால், இந்த மின் நிலையத்திற்கு சீரான முறையில் எரிவாயு விநியோகம் இருந்தால்தான் இங்கிருந்து மின்சாரம் வாங்கக் கூடிய விலையில் இருக்கும்' என்றார்.

     தில்லிக்கு மின்சாரம் வழங்கும் வகையில் 6 மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் நான்கு மின் உற்பத்தி நிலையங்கள் எரிவாயு சார்ந்தவை. நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த இந்திர பிரஸ்தா மின் உற்பத்தி நிலையம் 2010-ஆம் ஆண்டில் மூடப்பட்டது. 135 மெகாவாட் ராஜ்காட் அனல் மின் உற்பத்தி நிலையமும் விரைவில் தனது செயல்பாட்டை நிறுத்தும் தருவாயில் உள்ளது. தேசிய அனல் மின் நிறுவனம் (என்டிபிசி) நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்கிறது. இதன் பாதபூர் மின் உற்பத்தி நிலையத்தில் 5 பிரிவுகள் உள்ளன. இவற்றில் மூன்றை எரிவாயுவைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதற்கான திட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai