Enable Javscript for better performance
தொழிலதிபரின் வயிற்றில் தங்கக்கட்டிகள்!- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் குடிநீர் பாட்டில் மூடியை விழுங்கியதாக கூறி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த தொழிலதிபரின் வயிற்றில், அறுவை சிகிச்சையின் போது தங்கக்கட்டிகள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக போலீஸýக்கும் சுங்கத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். வியாபாரியின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 12 தங்கக்கட்டிகளையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 12 லட்சம் என்று கூறப்படுகிறது.

     இது குறித்து வியாபாரிக்கு சிகிச்சையளித்த அம் மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கூறியதாவது:

     தில்லி சாந்தினி செüக் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், கடந்த 7-ஆம் தேதி குடிநீர் பாட்டில் மூடியை விழுங்கிவிட்டதாகவும் அதனால் தனக்கு வயிற்று வலி ஏற்பட்டு வருவதாகவும் கூறி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார்.

    பரிசோதித்ததில், அவரது வயிற்றில் குடிநீர் பாட்டில் மூடி இருப்பதுபோல் எதுவும் தெரியவில்லை. வேறு ஏதோ பொருள் அவரது அடிவயிற்றில் சிக்கி கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

     இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது அடிவயிற்றில் தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சிக்குள்ளானோம். அவை ஒன்றன்பின் ஒன்றாக அகற்றப்பட்டது. மொத்தம் 12 தங்கக்கட்டிகள் அகற்றப்பட்டன. ஒவ்வொன்றும் 33 கிராம் எடை கொண்டதாக இருந்தது. அவற்றை மருத்துவக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தோம். அதன்பின் போலீஸýக்கும் சுங்க அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தங்கக்கட்டிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

     இதுதொடர்பாக அவரிடம் விசாரித்தபோது, அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அவர் சிகிச்சை முடிந்து, கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். எனினும், அவரை உயிருடன் மீட்டது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. தங்கக்கட்டிகளுடன் அவர் இன்னும் ஓரிரு நாள்கள் இருந்திருந்தால் குடல் முறிவு ஏற்பட்டு அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும்  என்று மருத்துவர் தெரிவித்தார்.

     இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "சிகிச்சை பெற வந்த தொழிலதிபர், 10 நாள்களுக்கு முன்புதான் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் வயிற்றில் உள்ள தங்கக்கட்டிகளை அகற்றும் முயற்சியில் தோல்வியடைந்தார். அதன்பின் வயிற்றில் அதிக வலி ஏற்படவே மருத்துவர்களை அணுகியுள்ளார். அவர் தங்கக் கட்டிகளை கடத்தி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று

    வருகிறது' என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai