Enable Javscript for better performance
மகள் கடத்தப்பட்டதாக பொய் புகார்: பெற்றோர் மீது போலீஸ் வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    மகள் கடத்தப்பட்டதாக பொய் புகார்: பெற்றோர் மீது போலீஸ் வழக்கு

    By புது தில்லி  |   Published on : 19th April 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகளை 4 பேர் கும்பல் கடத்திச் சென்றதாக போலீஸில் பொய் புகார் அளித்ததுடன், நீதிமன்றத்தில் அது தொடர்பாக பொய் வாக்குமூலம் அளித்த பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்த விவரம் வருமாறு: தில்லியைச் சேர்ந்த ஒருவர் சம்பவத்தன்று போலீஸில் அளித்த புகாரில், தனது வீட்டுக்குள் நான்கு பேர் கொண்ட கும்பல் புகுந்து மகளைக் கடத்திச் சென்றதாக கூறியிருந்தார். மேலும், பக்கத்து வீட்டில் வசிக்கும் உமேஷ் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.

      இதையடுத்து, உத்தர பிரதேச மாநிலம், மஹபயா நகர் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட பெண் மீட்கப்பட்டார். அவரைக் கடத்தியதாக உமேஷ் கைது செய்யப்பட்டார். உமேஷ் உள்பட நால்வர் மீது போலீஸார் ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்தனர்.

     இது தொடர்பான வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின் போது, "2012, ஆகஸ்ட் மாதத்தில் எனது மகளை உமேஷ் உள்ளிட்ட நால்வர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கடத்திச் சென்றனர்' என்று நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் சத்தியம் செய்தனர்.

      இந் நிலையில், "சம்பந்தப்பட்ட பெண்ணும் உமேஷும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததுள்ளனர். அப் பெண் தானாக விரும்பியே வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். மேலும், உமேஷின் வீட்டில் இரு மாதங்கள் தங்கியிருந்த அப் பெண் அவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தார்' என்று நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது. மேலும், மகளை கடத்திச் சென்றதாக பெண்ணின் பெற்றோர் போலீஸில் பொய் புகார் அளித்து வழக்குப் பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது.

     இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி காமினி லா, "இந்த வழக்கில்  சம்பந்தப்பட்ட பெண்ணின்  பெற்றோர் பொய் புகார் அளித்துள்ளனர். விசாரணை அதிகாரியை திசை திருப்பும் நோக்கில் தவறான சாட்சிகளையும் அளித்துள்ளனர். மேலும், நீதிமன்றம் முன் பொய் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    தானாகவே விரும்பி குற்றம்சாட்டப்பட்ட உமேஷுடன் சென்ற பெண், தனது பெற்றோரிடம் செல்போனில் அது பற்றிய விவரத்தைத் தெரிவித்துள்ளார். ஆனால், அதைப் பெற்றோர் விசாரணை அதிகாரியிடம் கூறாமல் மறைத்துள்ளனர். ஆகவே, பொய் வாக்குமூலம் அளித்த பெற்றோர் மீது விஜய் விஹார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வழக்கில் தொடர்புடைய நால்வர் மீது அரசுத் தரப்பில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களை வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் மீது விஜய் விஹார் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai