Enable Javscript for better performance
ஆப்கன் வியாபாரியிடம் கொள்ளையடித்த கும்பல் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆப்கன் வியாபாரியிடம் கொள்ளையடித்த கும்பல் கைது

    By புது தில்லி,  |   Published on : 20th April 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து ரூ. 60 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

    இதுகுறித்து தில்லி காவல் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) ரவீந்திர யாதவ் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

    கடந்த சில மாதங்களாக வடக்கு, மத்திய தில்லி பகுதிகளில் வியாபாரிகளைத் தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து, உதவி காவல் ஆணையர் கே.பி.எஸ்.மல்ஹோத்ரா மேற்பார்வையின் கீழ் உதவி ஆய்வாளர் விஜய் உள்ளிட்ட போலீஸார் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி ஆப்கானிஸ்தானை சேர்ந்த வியாபாரி ஷமீமை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக ஹவுஸ் காஸி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

    இந் நிலையில், அக் கும்பல் நிஜாமூதின் அருகே காப்ரிஸ்தான் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

    அப்போது நிஜாமூதின்-லாஜ்பத் நகர் சாலையில் வந்த காரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். காரில் தில்லி நிஜாமூதினை சேர்ந்த ஆரிஃப் கான் (38), செüரப் விஹாரைச் சேர்ந்த யஷ்வீர் சிங் (43), ஓக்லா பகுதியைச் சேர்ந்த அஹா கான் (42), பல்லிமாரான் பகுதியைச் சேர்ந்த வாலி அஹா (25) ஆகிய 4 பேர் இருந்தனர். அவர்கள் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    பல்லிமாரான் பகுதியில் காபூல் சைகா என்னும் இடத்தில் பல ஆப்கானிஸ்தானியர்கள் தங்கியுள்ளதாகவும், அவர்கள் இந்தியாவில் சம்பாதித்த பணத்தை தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்வதற்காக அங்கு வைத்துள்ளதாகவும் அஹாகான் தெரிவித்துள்ளார். அதில் சமீர் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் வியாபாரி ஷமீம் அதிகப் பணத்துடன் காபூல் செல்ல திட்டமிட்டிருந்ததை விடுதி ஊழியர் நதீம் என்பவர் மூலம் அறிந்தனர். அப் பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர்.

    இதையடுத்து, ஏப்ரல் 8-ஆம் தேதி அதிகாலையில் போலீஸ் வேடம் அணிந்து சென்ற 4 பேரும், விமான நிலையம் செல்ல முற்பட்ட ஷமீமை வழிமறித்து நிறுத்தினர். தாங்கள் தனிப்படைப் பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறி அவரை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

    அப்போது ஷமீமிடம் இருந்த ரூ. 60 லட்சத்தை பறித்துக் கொண்டு அவரை வழியிலேயே தள்ளிவிட்டுச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, நால்வரும் தங்கியிருந்த வீடுகளில் நடத்திய சோதனையின்போது இரண்டு கார்கள், ரூ. 16 லட்சம் ரொக்கம், மோட்டார் சைக்கிள், எல்இடி டிவி, டிவிடி பிளேயர், 5 மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று ரவீந்திர யாதவ் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai