Enable Javscript for better performance
கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் எச்சரிக்கை

    By புது தில்லி,  |   Published on : 20th April 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அமைச்சர் கபில் சிபலின் மகன் அமித் கபில் தொடர்ந்த அவதூறு வழக்கின் மே 24-ஆம் தேதி நடைபெறும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அவ்வாறு ஆஜராகாவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் உள்பட அக் கட்சியின் நான்கு தலைவர்களை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை எச்சரித்தது.

    மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபலின் செல்வாக்கைப் பயன்படுத்தி, அவரது மகன் அமித் சிபல் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வழக்குகளில் ஆஜராகி ஆதாயம் அடைந்ததாக ஆம்ஆத்மி கட்சித் தலைவர்கள் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.

    இதையடுத்து, அரவிந்த் கேஜரிவால் மற்றும் அக் கட்சியின் தலைவர்கள் ஷாஸியா இல்மி, பிரசாந்த் பூஷண், மணீஷ் சிúஸாடியா ஆகியோர் மீது புது தில்லி பெருநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அமித் சிபல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மாஜிஸ்திரேட் கடந்த ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் கேஜரிவாலுக்கும் மணீஷ் சிசோடியாவுக்கும் தில்லி பெருநகர நீதிமன்றம் ரூ. 2,500 அபராதம் விதித்தது.

    இந் நிலையில், இந்த வழக்கு தில்லி பெருநகர் மாஜிஸ்திரேட் சுனில் குமார் சர்மா முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கேஜரிவால் உள்ளிட்ட நால்வரது சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராகுல் மெஹ்ரா, "கேஜரிவால் உள்ளிட்ட நால்வரும் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இயலவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணையை தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 16-ஆம் தேதிக்குப் பிறகு நடத்த வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

    அப்போது குறுக்கிட்ட அமித் சிபல் சார்பில் ஆஜரான மோஹித் மாத்துர், "நீதிமன்றத்தில் நால்வரும் ஆஜராக வேண்டும். சாக்குப்போக்கு சொல்லக் கூடாது. நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்கவே குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்க திட்டமிட்டிருக்க வேண்டும்' என்றார்.

    இதையடுத்து, "அவதூறு வழக்கில் தொடர்புடைய கேஜரிவால், மணீஷ் சிசோடியா, பிரசாந்த் பூஷண், ஷாஸியா இல்மி ஆகியோர் அடுத்த விசாரணையின்போது நீதீமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும். இல்லையெனில், நால்வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்' என்று நீதிபதி சுனில் குமார் சர்மா எச்சரித்தார்.

    மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாததற்காக சிசோடியா, பூஷண், இல்மி ஆகியோருக்கு நீதிபதி தலா ரூ.2,500 அபராதம் விதித்தார். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை மே 24-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    முன்னதாக, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளதாலும், மக்களவைத் தேர்தலிலும் போட்டியிடுவதாலும் தனக்கு நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேஜரிவால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அதற்கு நீதிபதி அனுமதி அளித்தார். இதனால், அவருக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை.

    முன்னதாக, அமித் சிபல் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி கேஜரிவால் உள்பட அக் கட்சியின் நான்கு தலைவர்களும் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை ஜனவரி 16-ஆம் தேதி தில்லி உயர் நீதிமன்றத்தில் நிராகரித்தது. எனினும், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் அவர்களது கோரிக்கையை பரிசீலிக்குமாறு கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து அமித் சிபல் செய்திருந்த முறையீட்டு மனுவை கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து, அடுத்த விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai