Enable Javscript for better performance
சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க காத்திருக்கும் \\\"புதிய விருந்தாளிகள்\\\'- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க காத்திருக்கும் "புதிய விருந்தாளிகள்'

    By புது தில்லி,  |   Published on : 20th April 2014 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தலைநகர் தில்லிக்கு கோடை காலத்தில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விதவிதமான விலங்கினங்கள், பறவைகள் விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. இவை அனைத்தையும் தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் கண்டுகளித்து மகிழலாம்.

    தில்லி புரானா கிலா கோட்டையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது தேசிய உயிரியல் பூங்கா. கண்காட்சிக் கூடமாகவும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் தலமாகவும் விளங்கி வரும் இப் பூங்காவில் பறவை, விலங்கு இனங்கள் என 1,600-க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரித்து வரப்படுகின்றன. இவற்றில் இந்தியாவின் ஒரே மனிதக் குரங்கு இனமான கூல கிப்பான், காண்டாமிருகம், ஆப்பிரிக்க யானை, நெருப்புக்கோழி, ஒட்டகச் சிவிங்கி, சிங்கவால் குரங்கு ஆகிய அரிதான விலங்கினங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்துவருகின்றன.

    மத்திய சுற்றுச்சூழல், வன அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டியில் இயங்கும் ஒரே தேசிய உயிரியல் பூங்கா அந்தஸ்து பெற்றுள்ள இப் பூங்காவில், வரும் நவம்பர் மாதம் அகில உலக உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மற்றும் மீனக இயக்குநர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

    இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதிய விலங்குகளும், பறவை இனங்களும் தொடர்ந்து இப் பூங்காவுக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த வகையில், கடந்த சில மாதங்களில் மட்டும் ஏராளமான புதிய விலங்கினங்கள் பூங்காவுக்கு வந்துள்ளன.

    இது குறித்து தேசிய உயிரியல் பூங்காவின் மூத்த வன விலங்கு மருத்துவர் ந. பன்னீர்செல்வம் "தினமணி' செய்தியாளரிடம் கூறியதாவது:

    தில்லியில் வரும் நவம்பரில் அகில உலக உயிரியல் பூங்கா இயக்குநர்கள், மீன்கள் உயிரின இயக்குநர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக புதிய விலங்கினம் என்ற வகையிலும் வெகுமதியாகவும் விலங்குப் பரிமாற்ற அடிப்படையில் பெறப்பட்டு வருகின்றன.

    இந்த வகையில், பிலாஸ்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து தில்லி தேசிய உயிரியல் பூங்காவுக்கு நான்கு கொம்புகள் கொண்ட இரு மான்கள், ஒரு ஜோடி கழுதைப்புலி பெறப்பட்டுள்ளன.

    மைசூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி காட்டு எருமை, ஒரு ஜோடி கருப்பு அன்னம், இரு வங்கப்புலிகள் ஆகியவை மார்ச் 30-ஆம் தேதி பெறப்பட்டன. திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் இருந்து கருப்பு அன்னங்கள் ஒரு ஜோடி, நான்கு தென்னாட்டுக் குரங்குகள், ஆந்தைகள், தென் அமெரிக்க சிறுத்தை ஆகியவை இம் மாதம் 2-ஆவது வாரத்தில் பெறப்பட்டன.

    இவற்றுக்குப் பதிலாக வெள்ளைப் புலி, சில பறவைகள், விலங்குகள் ஆகியவை பரிமாற்ற அடிப்படையில் திருவனந்தபுரம் பூங்காவுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன. சிறிது காலத்திற்குப் பிறகு, சண்டீகர் உயிரியல் பூங்காவில் இருந்து நான்கு சிறுமான்கள் (இரு ஜோடி) பெறப்பட்டு, அவற்றுக்கு பதிலாக தில்லி உயிரியல் பூங்காவில் இருந்து 2 ஜோடி (நான்கு) மணிப்பூர் மான்கள் வழங்கப்பட உள்ளன.

    இவை தவிர, அருணாசலப் பிரதேசம் இடா நகர் வனவிலங்கு பூங்காவில் இருந்து கூல கிப்பான் பெண் மனிதக் குரங்கு தேசிய உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்பட உள்ளது. ஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி கங்கை நீர் முதலை, ஓநாய் பெறப்பட உள்ளன. அதற்குப் பதிலாக, விலங்குப் பரிமாற்றத்தின் அடிப்படையில் இங்கிருந்து சில வகை மான்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளன.

    ஏற்கெனவே, டார்ஜீலிங் உயிரியல் பூங்காவில் இருந்து வண்ணக் கோழி வகையைச் சார்ந்த லேடி ஆம்ஹெர்ஸ்ட் ஃபெஸன்ட், கிரே பார்ட்ரிட்ஜ், தங்க நிறக் கோழி, எட்வர்ட் ஃபெஸன்ட் ஆகியவை தில்லி உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன. இவ்வாறு அதிக எண்ணிக்கையில் வனவிலங்குகள் வந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் வருகையும் அதிகரித்துள்ளது என்றார் பன்னீர்செல்வம்.

    படங்கள்: டி.ராமகிருஷ்ணன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai