Enable Javscript for better performance
யாசின் பட்கல் மீது குற்றப்பத்திரிகை- Dinamani

சுடச்சுட

    

    தில்லி ஜாமா மசூதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் வழக்கில் இந்திய முஜாஹிதீன் அமைப்பின் இணை நிறுவனர் யாசின் பட்கல், அவரது கூட்டாளி அஸதுல்லா அக்தர் ஆகியோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை தில்லி பாட்டியாலா ஹவுஸ் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

    பழைய தில்லி பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற ஜாமா மசூதி வளாகத்தில் 2010-ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் தைவானை சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.

    இது தொடர்பாக தில்லி தனிப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். அவர்கள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும் என்று செஷன்ஸ் நீதிபதி தயா பிரகாஷ் தெரிவித்தார். குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:

    தில்லியில் 2010-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகள் தொடங்கும் முன், தில்லியில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துமாறு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் யாசின் பட்கலை பணித்தது. குறிப்பாக, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவை தனிமைப்படுத்த, நாட்டுக்கு அவப்பெயரை உருவாக்க, வெளிநாட்டுப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தி காமன்வெல்த் போட்டிகளை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    இத் திட்டத்தை யாசின் பட்கல் மூலம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தில்லி பகார்கஞ்ஜ் பகுதியில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் வெளிநாட்டுப் பயணிகள் மீது தூப்பாக்கி சூடு நடத்தத் திட்டமிட்ட யாசின் பட்கல், அதற்காக கைத்துப்பாக்கி, சிறு துப்பாக்கியை வாங்கினார். ஆனால், அந்த திட்டம் நிறைவேறவில்லை.

    இதைத் தொடர்ந்து, ஜாமா மசூதிக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் மீது 2010, செப்டம்பர் 19-ஆம் தேதி தாக்குல் நடத்தத் திட்டமிட்டனர். இதன்படி, ஜாமா மசூதியை சுற்றிப் பார்க்க வரும் வெளிநாட்டுப் பயணிகளை நோக்கி துப்பாக்கியால் கண்டபடி சூடுவது, அதன் பிறகு, வெடிகுண்டை வெடிக்கச் செய்வது என திட்டமிட்டனர்.

    இத் திட்டத்தின்படி திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயங்கரவாதிகள் சித்திக், ஆதில் ஆகிய இருவரும் ஜாமா மசூதியின் 3-ஆவது நுழைவாயிலை சென்றடைந்தனர். அதே பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்ட காரை யாசின் பட்கல் தயாராக நிறுத்தியிருந்தார்.

    அப்போது ஜாமா மசூதியைக் காண வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலாப் பேருந்தில் வந்திறங்கினர். அவர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டதில் தைவான் நாட்டைச் சேர்ந்த கு-ஜே-வே-, கோ-சியாங்கே ஆகிய இருவரும் காயமடைந்தனர். இதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதலை நடத்தவும் சக்தி வாய்ந்த வெடிக்குண்டை ஜாமா மசூதி பகுதியில் வெடிக்க செய்யவும் யாசின் பட்கல், அஸதுல்லா அக்தர் ஆகியோர் சதித் திட்டம் தீட்டியுள்ளது விசாரணையில் தெளிவாகிறது என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் தேடப்பட்டு வந்த யாசின் பட்கல், அஸதுல்லா அக்தர் ஆகிய இருவரும் இந்திய-நேபாள எல்லையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai