Enable Javscript for better performance
ஒன்றின் மேல் ஒன்றாக மெட்ரோ ரயில் பாலங்கள்- Dinamani

சுடச்சுட

    

    தில்லி கர்கர்டூமா மெட்ரோ ரயில் நிலையம் அருகே ரயில்வே பாலத்தின் மேல்பகுதியில் ரயில்வே பாலம் அமைத்து தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) அரிதான சாதனை நிகழ்த்தியுள்ளது. மெட்ரோ மூன்றாம் கட்டப் பணியில் இது போன்று மேலும் சில பாலங்கள் அமைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 2016-ஆம் ஆண்டில் இப் பணிகளை விரைந்து முடிக்க டிஎம்ஆர்சி திட்டமிட்டு பணிகளைத் துரிதகதியில் மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி, தலைநகரில் பல்வேறு இடங்களிலும் தரைக்கடியிலும், தரையின் மேல்மட்டத்திலும் சுரங்கப் பாதைகள் அமைப்பது, மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    இந் நிலையில், மூன்றாவது கட்டத் திட்டத்தின் முக்கியமான, சவால் நிறைந்த ரயில்வே பாலத்திற்கு மேலே பாலம் அமைக்கும் பணியை சில இடங்களில் மேற்கொள்ள டிஎம்ஆர்சி திட்டமிட்டிருந்தது. இதன்படி, புதிய வழித்தடமான மஜ்லிஸ் பார்க் - ஷிவ் விஹார் மெட்ரோ வழித்தட பகுதியில் இப் பாலம், ஏற்கெனவே அமைந்துள்ள கர்கர்டூமா மெட்ரோ ரயில் நிலையம் அருகே (வைசாலி- துவாரகா வழித்தடம்) அமைக்கப்பட்டது. இக் கட்டுமானப் பணி அரிதான சாதனையாகக் கருதப்படுகிறது.

    தரையில் இருந்து 21 மீட்டர் உயரத்திலும், ஏற்கெனவே அமைந்துள்ள மெட்ரோ ரயில்வே மேம்பாலத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திலும் இந்த ரயில்வே மேம்பாலம் குறுக்காகச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 37 மீட்டர் உயரமுள்ள இரு தூண்களுக்கு இடையே உயரே செல்லும் வகையில் சிறப்பு கான்கிரீட் பொருத்தப்பட்டுள்ளது. இப் பணியில் மெட்ரோ பொறியாளர்கள் மிகவும் கவனமாக ஈடுபட்டனர். மெட்ரோ ரயில் சேவை இல்லாத நேரத்தில் இப் பணியை மேற்கொண்டு சிறப்பாக முடித்துள்ளனர்.

    மேலும், இப் பணியின்போது ரயில்வே பாலத்தின் வழியாகச் செல்லும் மின்கம்பிகள் மீது உரசல் ஏதும் நிகழாதவாறு சிசிடிவி மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதே போன்று நேதாஜி சுபாஷ் பிளேஸ் (ரிடாலா- தில்ஷாத் கார்டன் வழித்தடம்), தௌகுவான் (மஜ்லிஸ் பார்க்- ஷிவ் விஹார் வழித்தடம்), மயூர்விஹார் (மஜ்லிஸ் பார்க்- ஷிவ் விஹார் வழித்தடம்), ஆனந்த் விஹார் (மஜ்லிஸ் பார்க், ஷிவ் விஹார் வழித்தடம்) ஆகிய இடங்களிலும் பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளன.

    59 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மஜ்லிஸ் பார்க் - ஷிவ் விஹார் மெட்ரோ வழித்தடத்தில் 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்க ரயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தில்ஷாத் கார்டன் - ரிடாலா இடையே 8 கி.மீ. நீள தடத்தில் தில்லி மெட்ரோ சேவை, 2002-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது 140 கிலோ மீட்டர் தொலைவுக்கான முன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணி நடைபெற்றுவருகிறது. இப் பணிகள் முடிவடையும்போது தில்லி, தேசிய தலைநகர் வலயத்தில் மெட்ரோ ரயிலின் ஒருங்கிணைந்த சேவை 320 கி.மீ. ஆக அதிகரிக்கும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai