Enable Javscript for better performance
சாலை விபத்தில் ஊனமுற்ற இளைஞருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    சாலை விபத்தில் ஊனமுற்ற இளைஞருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

    By புது தில்லி  |   Published on : 21st April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பின்னோக்கி வந்த லாரி மோதி உடல் ஊனமுற்ற இளைஞருக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டை லாரிக்கு காப்பீடு செய்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்குமாறு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து வழக்கு விவரம் வருமாறு:

    ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதை சேர்ந்தவர் ஜனார்தன் சிங் (29). கணினிப் பொறியாளரான இவர், தெற்கு தில்லி நேரு பிளேஸில் பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 2012, மே 29-ஆம் தேதி காலை ஜனார்தன் சிங் தனது மோட்டார் சைக்கிளில் தில்லியில் இருந்து ஃபரீதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, மெஹ்ரெளலி - பதர்பூர் பகுதியில் அவ்வழியாக பின்னோக்கி இயக்கப்பட்ட லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் ஜனார்தன் தலை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து, லாரியின் ஓட்டுநர், லாரிக்குக் காப்பீடு செய்த சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியோர் இழப்பீடு தரக் கோரி தில்லியில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோரல் தீர்ப்பாயத்தில் ஜனார்தன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் "லாரியை அதன் ஓட்டுநர் வேகமாகவும் கவனக் குறைவாகவும் பின்னோக்கி ஓட்டி வந்து மோட்டார்சைக்கிள் மீது மோதினார். இதில் எனது தலை, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவில் ஒரு மாதம் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டேன். இந்த விபத்தில் எனது உடலின் இடுப்புப் பகுதியின் வலது மேல்பாகம் மற்றும் கீழ் பாகம் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    வருவாய் இழந்து எனது குடும்பம் சிரமத்தில் உள்ளது. ஆகவே, எனது உடல் ஊனமுற சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநரின் கவனக்குறைவுதான் காரணம்' என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

    வழக்கை விசாரித்த மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோரல் தீர்ப்பாயத் தலைவர் பிரேம் குமார் பர்தவால் அளித்த தீர்ப்பு:

    "சம்பவத்தன்று பின்னோக்கி எடுத்து வரப்பட்ட லாரி மோதியதால்தான் ஜனார்தன் சிங்கிற்கு உடலில் ஊனம் ஏற்பட்டுள்ளதை போலீஸார் அளித்த ஆவணங்கள், சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையின் விபத்து சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் அளித்த சான்றிதழும் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

    இந்த விபத்தால் ஜனார்தனின் உடலில் 61.71 சதவீதம் உடல் ஊனமுற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால், அவரது வருவாய் ஈட்டும் திறனும் முடங்கிப் போயுள்ளது. விபத்துக்கான காரணத்தையும், தனது தரப்பு நியாயத்தையும் லாரியின் ஓட்டுநர் சரியாக முன்வைக்கவில்லை.

    இதனால், லாரியின் ஓட்டுநரின் கவனக் குறைவும் வாகனத்தை வேகமாக ஓட்டியதும்தான் விபத்துக்குக் காரணம் என்பதும் தெளிவாகியுள்ளது. ஆகவே, ஜனார்தன் சிங்கிற்கு லாரிக்கு காப்பீடு செய்த நிறுவனம் ரூ. 25,65,000 இழப்பீடு வழங்க வேண்டும்' என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, "மோட்டார் சைக்கிளை ஜனார்தன் சிங் தலைக் கவசம் அணியாமல் ஓட்டி வந்ததால்தான் விபத்தில் சிக்க நேர்ந்தது. அதனால், அவருக்கு இழப்பீடு கோரும் உரிமை இல்லை' என்று சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் முன்வைத்த வாதத்தை தீர்ப்பாயம் நிராகரித்து உத்தரவிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai