Enable Javscript for better performance
தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் மோடிதான் பிரதமர்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் மோடிதான் பிரதமர்: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

    By புது தில்லி,  |   Published on : 21st April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால், குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடிதான் பிரதமராக பதவியேற்பார் என்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.

    தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ந்து, அவை மோடிக்கு பதிலாக வேறொருவரை பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்தால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு ராஜ்நாத் சிங் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தேர்தல் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லும்போது பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:

    மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைந்தால், எந்தச் சூழ்நிலையானாலும் சரி மோடிதான் பிரதமராக பதவியேற்பார். தேர்தலில் குறிப்பிட்ட மதம் மற்றும் ஜாதியை அடிப்படையாகக் கொண்டு மக்களிடம் பாஜக வாக்கு கேட்கவில்லை. தேர்தலின்போது தங்களது வாக்குகளை சுதந்திரமாக அளிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதனடிப்படையில் எந்தவித வேறுபாடுமின்றி அனைத்து தரப்பு மக்களிடமும், வாக்கு கேட்டு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மோடியை முஸ்லிம் மக்கள் அதிகளவில் ஆதரிக்கின்றனர். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தங்களை மதசார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் பிற அரசியல் கட்சிகள், திட்டமிட்டு பிரசாரம் செய்து வருவதை முஸ்லிம்கள் புரிந்து கொண்டுள்ளனர். இதனால் மோடி மற்றும் பாஜகவுக்கு முஸ்லிம்கள் ஆதரவு அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

    குஜராத் கலவரத்தின்போது, மோடி எந்தத் தவறும் செய்யவில்லை. ஆதலால் இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையில்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நாட்டில் அதிக கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்டதா?

    மாநில முதல்வர் என்ற முறையில், குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மோடி எடுத்தார். தனக்கு எதிரான விசாரணைக்கு ஒருபோதும் அவர் எதிர்ப்பு தெரிவித்தது கிடையாது. அப்படியிருக்கும்போது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை ஏன் எழுகிறது என்று தெரியவில்லை.

    மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடாது. சட்டம் தனது கடமையை செய்யும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai