Enable Javscript for better performance
பெண் பயணிகளிடம் சோதனை நடத்த 200 புதிய \\\"பூத்\\\'கள்- Dinamani

சுடச்சுட

    

    பெண் பயணிகளிடம் சோதனை நடத்த 200 புதிய "பூத்'கள்

    By புது தில்லி  |   Published on : 21st April 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் பெண் பயணிகளிடம் சோதனை மேற்கொள்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 200 சாவடிகள் (பூத்கள்) அமைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக இந்த பூத்கள் தில்லி மெட்ரோவின் புளூ-லைன் வழித்தடத்தில் அமைக்கப்பட உள்ளதாக மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எஃப்.) தெரிவித்தனர்.

    தில்லியின் முக்கியப் போக்குவரத்து அமைப்பாக தில்லி மெட்ரோ ரயில்வே திகழ்ந்து வருகிறது. நொய்டா, காஜியாபாத், குர்கான், ஃபரீதாபாத் உள்பட தேசியத் தலைநகர் வலயத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் தினமும் சுமார் 25 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துவருகின்றனர்.

    மெட்ரோ ரயில் நிலையங்களின் பாதுகாப்புப் பணியை சி.ஐ.எஸ்.எஃப். போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 134 மெட்ரோ ரயில் நிலையங்களில் சுமார் 5 ஆயிரம் சி.ஐ.எஸ்.எஃப். போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சிறப்பான பாதுகாப்பை அளிக்கும் வகையில் அவ்வப்போது சி.ஐ.எஸ்.எஃப். போலீஸார் புதிய பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். அண்மையில் மெட்ரோவில் பாதுகாப்பு நெறிமுறைகளில் சில மாற்றங்களை மேற்கொள்வது என சி.ஐ.எஸ்.எஃப். போலீஸார் முடிவு செய்தனர்.

    இதையடுத்து, ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளும் நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

    அதன்படி, சில மெட்ரோ ரயில் நிலையங்களில் "மெட்டல் டிடெக்டர்' அருகில் உடைமைகளை சோதனை செய்யும் "எக்ஸ்ரே' சாதனங்கள் அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் பயணியையும் அவரது உடைமையையும் கண்காணிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

    மெட்ரோ ரயில் நிலையங்களில் துணியால் அல்லது மெல்லிய பலகையால் மறைக்கப்பட்ட சிறு அறைபோன்ற இடத்தில் பெண் பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது. இது அவர்களது அந்தரங்கத்தைப் பாதிக்கக் கூடும் என்று கருதிய சி.ஐ.எஸ்.எஃப்., மெட்ரோ ரயில் நிலையங்களில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சோதனை பூத்களை அமைப்பது என்று முடிவு செய்தது. இதையடுத்து, விரைவில் சுமார் 200 மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த சோதனை பூத்கள் அமைக்கப்பட உள்ளதாக சி.ஐ.எஸ்.எஃப். தலைமை அதிகாரி அர்விந்த் ரஞ்சன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "மெட்ரோ ரயில் பயணிகள் வசதியாகவும் பாதுகாப்புடனும் பயணம் மேற்கொள்ளும் வகையில் இப் புதிய உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஏறக்குறை 12 பூத்கள் இதுபோன்ற செயல்படத் தொடங்கிவிட்டன. இப் பூத்களில் பெண் பயணிகளிடம் சி.ஐ.எஸ்.எஃப். பெண் காவலர் சோதனை நடத்துவர். இதனால், அவர்களது அந்தரங்கம் பாதுகாக்கப்படும்' என்றார். அதேபோன்று, புதிய பாதுகாப்பு நெறிமுறைகளையும் சி.ஐ.எஸ்.எஃப். வகுத்துள்ளது.

    துவாரகா செக்டர் 8, 12, 13, 14, யமுனா பேங்க், சிவில் லைன்ஸ், விதான் சபா, ரேஸ் கோர்ஸ் ஆகிய எட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பு விஷயங்களில்

    சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு பயணிகளிடம் வலியுறுத்தப்பட்டு வருவதாக சிஐஎப்எஃப் வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai